பிரதமர் பதவிக்கு வலிமையான வேட்பாளர் நிதிஷ்குமார்- தேஜஸ்வி யாதவ்
|எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டால், பிரதமர் பதவிக்கு நிதிஷ்குமார் வலிமையான வேட்பாளராக இருப்பார் என்று தேஜஸ்வி யாதவ் கூறினார்.
வலிமையான வேட்பாளர்
பீகாரில், பா.ஜனதாவுடன் உறவை துண்டித்துக்கொண்ட முதல்-மந்திரி நிதிஷ்குமார், ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் முதல்-மந்திரி ஆனார். ராஷ்டிரீய ஜனதாதள தலைவரும், லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார்.
இந்தநிலையில், தேஜஸ்வி யாதவ் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் வேட்பாளராக நிதிஷ்குமார் நிறுத்தப்படுவதாக பேசப்படுவது பற்றி கேட்டதற்கு தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:-
இதற்கு நிதிஷ்குமார்தான் பதில் அளிக்க வேண்டும். ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் சார்பில் நான் எதுவும் பேச முடியாது. ஆனால், எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டால், நிதிஷ்குமார் நிச்சயமாக வலிமையான வேட்பாளராக இருப்பார்.
எதிர்க்கட்சிகள் ஒற்றுமை
நிதிஷ்குமார், 50 ஆண்டுகளாக, சமூக, அரசியல் போராளியாக இருக்கிறார். ஜெயபிரகாஷ் நாராயணன் இயக்கம் மற்றும் இடஒதுக்கீடு இயக்கங்களில் பங்கேற்றுள்ளார். 37 ஆண்டுகள் பரந்த நாடாளுமன்ற, நிர்வாக அனுபவம் ெபற்றவர். சக அரசியல் தலைவர்களிடையே நன்மதிப்பை பெற்றிருப்பவர்.
பீகாரில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டிருப்பது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு முன்னறிவிப்பு ஆகும்.
பெரும்பாலான எதிர்க்கட்சிகள், நாட்டின் முன்னால் உள்ள பெரும் சவாலை உணர்ந்து கொண்டுள்ளன. பா.ஜனதாவின் மேலாதிக்கத்தை இந்திய அரசியலில் இருந்து அகற்ற வேண்டும்.
மேலும், மாநில கட்சிகளும், இதர முற்போக்கு அரசியல் கட்சிகளும் குறுகிய லாப, நஷ்டங்களுக்கு அப்பால் சிந்தித்து, நாட்டை காப்பாற்ற ேவண்டும். முளையிலேயே கிள்ளாவிட்டால், பிறகு கடினமாகி விடும்.
நிதிஷ்குமார் மீது விமர்சனம்
மத்திய அரசு, ஒத்துழைப்பான கூட்டாட்சி பற்றி பேசுகிறது. ஆனால், பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை கண்டுகொள்ள மறுக்கிறது. பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து தேவை. ஆனால் அதற்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை.
நிதிஷ்குமார் மீது நானும், எனது கட்சியும் விமர்சனங்களை வைத்தது உண்மைதான். அவையெல்லாம் ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாக ஆற்றிய கடமை. மக்களின் கவலைகளை அரசு கேட்க வேண்டும் என்பதற்காக பேசினோம்.
நடைமுறையில் நான்தான் முதல்-மந்திரி என்று பா.ஜனதா கூறியதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். பீகாரில், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்று நான் முன்பு கூறிய வாக்குறுதியை நிறைவேற்ற மத்திய அரசு உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.