நிபா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு: கோழிக்கோட்டில் மத்திய சுகாதார குழு ஆய்வு
|நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் கோழிக்கோட்டில் பள்ளி-கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கோழிக்கோடு,
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்தனர். மேலும் இறந்தவர்களில் ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்த 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதியானது. இதையடுத்து நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையை கேரள அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இறந்த நபர்கள் அனுமதிக்கப்பட்ட தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வரும் 24 வயதான ஒரு ஊழியருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர், கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் நிபா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் நிபா வைரசால் பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 9 வயது சிறுவனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நிபா வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வரும் 11 பேரின் ரத்த மாதிரி, உமிழ்நீர் ஆகியவை சேகரிக்கப்பட்டு புனே வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது.
மத்திய சுகாதார குழு ஆய்வு
இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா அறிவித்தபடி மத்திய சுகாதாரக்குழு நேற்று கோழிக்கோடுவுக்கு வந்தனர். மால சப்ரா தலைமையிலான அந்தக்குழு மாநில சுகாதாரத்துறை மந்திரி வீனா ஜார்ஜ் மற்றும் கலெக்டர் கீதா, சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர். இதையடுத்து நிபா பாதித்து இறந்த நபர்கள் வசித்த பகுதிக்கு சென்று தற்போதைய நிலைமையை ஆய்வு செய்தனர்.
பள்ளி-கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை
இந்தநிலையில், நிபா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு காரணமாக கோழிக்கோடு மாவட்டம் முழுவதும் இன்று(வெள்ளிக்கிழமை), நாளை ஆகிய 2 நாட்கள் அனைத்து பள்ளி-கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல கோழிக்கோழி அருகில் உள்ள புதுச்சேரி மாநிலத்தின் பிராந்தியமான மாகியில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இன்று, நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
700-க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பு
கோழிக்கோடுவில் நிபா வைரஸ் பாதித்து இறந்தவர்கள், பாதித்து சிகிச்சை பெறுபவர்கள் என மொத்தம் 5 பேருடன் தொடர்பில் இருந்தவர்களாக சுமார் 700-க்கும் மேற்பட்டோரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களை தனிமைப்படுத்தி சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.