கர்நாடகத்தில் 4-வது முதல்-மந்திரி நிஜலிங்கப்பா
|கர்நாடகத்தின் 4-வது முதல்-மந்திரி நிஜலிங்கப்பா ஆவார்.
பெங்களூரு:
கர்நாடகத்தின் 4-வது முதல்-மந்திரி என்ற பெருமைக்கு சொந்தக்காரர் நிஜலிங்கப்பா. இவர் கர்நாடக சட்டசபையில் 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி முதல் 1958-ம் ஆண்டு மே மாதம் 1-ந்தேதி வரை ஒரு ஆண்டு 197 நாட்கள் முதல்-மந்திரியாக பதவி வகித்தார். பல்லாரி மாவட்டத்தில் ஹலுவாகலு என்ற சிறிய கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் 1902-ம் ஆண்டு டிசம்பர் 10-ந்தேதி பிறந்தார். தாவணகெரே, சித்ரதுர்காவில் பள்ளி படிப்பை முடித்த அவர், பெங்களூரு மத்திய கல்லூரியில் பட்டப்படிப்பை நிறைவு செய்தார். பின்னர் புனேயில் சட்டப்படிப்பை படித்தார்.
மாகத்மா காந்தி, ராஜேந்திர பிரசாத் ஆகியோரின் சித்தாந்தங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்ட நிஜலிங்கப்பா, கர்நாடகத்தில் சுதந்திர இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்க தொடங்கினார். இந்திய சுதந்திர போராட்டத்தை தவிர கர்நாடக ஒருங்கிணைப்பு இயக்கத்திலும் இவர் முக்கிய பங்காற்றினார். அரசியலில் ஆர்வம் கொண்ட நிஜலிங்கப்பா, காங்கிரஸ் அமைப்பில் தீவிரமாக செயல்பட்டார். முதலில் தொண்டராக இருந்த அவர், 1946 முதல் 1950 வரை மைசூரு பிரதேச காங்கிரஸ் தலைவரானார். பின்னர் 1968-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் பணியாற்றினார்.
1952-ம் ஆண்டு சித்ரதுர்கா நாடாளுமன்ற தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1956-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ந்தேதி நிஜலிங்கப்பா கர்நாடகத்தின் 4-வது முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி பிரிந்து கிடந்த கன்னடத்து மொழி பேசும் மக்களை ஒருங்கிணைத்து மைசூரு மாநிலம் உருவாக்கப்பட்டது.
நிஜலிங்கப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது, திபெத் அகதிகள் குடியேற நிலம் வழங்கினார். பைலகுப்பே, முண்டுகோடு, கொள்ளேகால் ஆகிய பகுதிகளில் குடியிருப்பும் கட்டி கொடுத்தார். மேலும் அமெரிக்காவின் நில மானிய கல்லூரி முறையில் யூ.ஏ.எஸ்.-ஐ நிறுவ முடிவு செய்து வேளாண் அறிவியல் பல்கலைக்கழக மசோதாவை நிறைவேற்றினார். நிஜலிங்கப்பா ஓய்வு பெற்ற பிறகும், அவரது எளிமை மற்றும் நேர்மைக்காக அறியப்பட்டவர் ஆவர்.