மங்களூருவிற்கு போதைப்பொருள் கடத்திய நைஜீரிய பெண், பெங்களூருவில் கைது
|மங்களூரு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய நைஜீரிய பெண்ணை பெங்களூருவில் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.20 லட்சம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மங்களூரு:-
மங்களூரு போதைப்பொருள் வழக்கு
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு, உல்லால், கங்கனாடி, கோனஜே, சூரத்கல் ஆகிய போலீஸ் நிலையங்களில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக 7 வழக்குகள் பதிவாகியிருந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய போதைப்பொருள் கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த 7 வழக்குகளில் தொடர்புடையதாக சிலரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பெங்களூருவில் இருந்து போதைப்பொருட்களை வாங்கி வந்து, அதனை மங்களூரு நகரப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இந்த போதைப்பொருள் கடத்தலில் நைஜீரியாவை சேர்ந்த பெண் ஒருவர் ஈடுபட்டிருப்பதாக தெரியவந்தது.
இதையடுத்து மங்களூரு போலீசார் பெங்களூரு நகருக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த பெண் எலகங்காவில் இருப்பதாக தகவல் கிடைத்தது.
நைஜீரிய பெண் கைது
எலகங்காவிற்கு சென்ற போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர். பின்னர் அவரை மங்களூரு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் ைநஜீரியா நாட்டை சேர்ந்த ரெஜினா ஜாரா என்ற ஆயிஷா (வயது 33) என்பது தெரியவந்தது. கல்வி விசாவில் பெங்களூரு வந்த இந்த பெண் படிப்பை முடித்ததும், நர்சாக பணியாற்றினார்.
அப்போது சில போதைப்பொருள் விற்பனை கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த தொழிலில் அதிகளவு லாபம் கிடைக்கும் என்ற நோக்கில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட தொடங்கினார்.
மங்களூருவில் பதிவாகியிருந்த 7 வழக்குகளில் தொடர்புடையவர்கள் ஆயிஷாவிடம் இருந்து போதைப்பொருட்களை வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து விசாரணையில் ஆயிஷா கொடுத்த தகவலின் பேரில் போலீசார் ரூ.20 லட்சம் மதிப்பிலான 400 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள், ஒரு செல்போன், ரூ.2,910 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் கைதான ஆயிஷா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.