< Back
தேசிய செய்திகள்
பெங்களூருவில் ரூ.2 கோடி போதைப்பொருளுடன் நைஜீரியா வாலிபர் கைது
தேசிய செய்திகள்

பெங்களூருவில் ரூ.2 கோடி போதைப்பொருளுடன் நைஜீரியா வாலிபர் கைது

தினத்தந்தி
|
25 July 2023 12:15 AM IST

பெங்களூருவில் விற்க முயன்ற ரூ.2 கோடி மதிப்பிலான போதைப்பொருளுடன் நைஜீரியா வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரை மாறு வேடத்தில் சென்று போலீசார் பிடித்துள்ளனர்.

பெங்களூரு:

பெங்களூரு வி.வி.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போதைப்பொருள் விற்கும் கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக மாறு வேடத்தில் சென்ற போலீசார், தங்களுக்கு போதைப்பொருள் வேண்டும் என்று அந்த கும்பலை சேர்ந்த ஒருவனை தொடர்பு கொண்டுள்ளனர்.

அப்போது அந்த நபர் தன்னிடம் போதைப்பொருள் இருப்பதாகவும், தான் கூறும் இடத்திற்கு வரும்படியும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாறு வேடத்தில் சென்ற போலீசார், அந்த நபர் கூறிய இடத்திற்கு சென்று போதைப்பொருளை வாங்கினார்கள். மேலும் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தார்கள். விசாரணையில், அவர் நைஜீரியாவை சேர்ந்த ஜான் (வயது 27) என்று தெரியவந்தது.

மேலும் தனது கூட்டாளியுடன் பெங்களூருவில் வசித்து வருவதாகவும், அந்த வீட்டில் தான் போதைப்பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாகவும் போலீசாரிடம் ஜான் கூறினார். உடனே அவரது வீட்டுக்கு போலீசார் விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் வீட்டில் இருந்த ஜானின் கூட்டாளி, போதைப்பொருட்கள் இருந்த பையை கழிவறைக்குள் வீசினார். பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் 2-வது மாடியில் இருந்து குழாயை பிடித்து கீழே இறங்கினான். அவனை போலீசார் பிடிக்க முயன்றும், சிக்காமல் தப்பி ஓடி விட்டான்.

கழிவறைக்குள் கிடந்த பையை போலீசார் எடுத்து பார்த்த போது அதற்குள் 1 கிலோ எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் இருந்தது. கைதான ஜானிடம் இருந்து 20 கிராம் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது. ஒட்டு மொத்தமாக 1 கிலோ 20 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருட்களையும், ஒரு மோட்டார் சைக்கிளையும், எடை போடும் எந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்திருந்தார்கள். அவற்றின் மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.

கைதான ஜான் மற்றும் அவனது கூட்டாளி பெங்களூருவில் சட்டவிரோதமாக தங்கி இருந்ததும் தெரியவந்துள்ளது. அவர்களது விசா முடிந்த பின்பும் நைஜீரியாவுக்கு செல்லாமல் சட்டவிரோதமாக தங்கி இருந்து கல்லூரி மாணவர்கள், கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விற்பனை செய்வதை தொழிலாக வைத்திருந்தார்கள்.

கோவாவில் இருந்து மொத்தமாக போதைப்பொருட்களை வாங்கி வந்து பெங்களூருவில் தங்களது வீட்டில் பதுக்கி வைத்து விற்று வந்துள்ளனர். கைதான ஜான் மீது வி.வி.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகி விட்ட கூட்டாளியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்