டெல்லியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நைஜீரியா வாலிபர் கைது
|டெல்லியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நைஜீரியாவைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் போதைப் பொருள் விநியோகம் செய்யப்படுவது தொடர்பாக டெல்லி காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போஸ்வால் சவுக் பகுதியில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
அப்போது அந்த பகுதியில் பீட்டர் நாலுவே(33) என்ற வெளிநாட்டைச் சேர்ந்த நபர் இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்துள்ளார். அவரைப் பிடித்து போலீசார் விசாரித்ததில், அவரிடம் சுமார் 1.534 கிலோ ஹெராயின் போதைப்பொருள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்ததில், பீட்டர் நாலுவே நைஜீரியாவைச் சேர்ந்தவர் என்பதும், டெல்லியில் அவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. அவர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.