பயணிகள் ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில் லக்னோ நீதி மன்றத்தில் 7 பேருக்கு மரணதண்டனை
|கான்பூர் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத வழக்கில் லக்னோ நீதி மன்றத்தில் 7 பேருக்கு மரணதண்டனை யும் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது.
லக்னோ
2017ஆம் ஆண்டு போபால்-உஜ்ஜைன் பயணிகள் ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில் ஐ.எஸ்.அமைப்புடன் தொடர்புடைய 7 பேருக்கு லக்னோவில் உள்ள சிறப்பு தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்தது.இந்த வழக்கில் ஆகஸ்ட் 31, 2017 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
போபால்-உஜ்ஜைன் பயணிகள் ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேருக்கு மரண தண்டனையும், ஒரு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் விதித்து லக்னோவின் தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொள்கைகளை பரப்புவதாகவும், இந்தியாவில் அதன் செயல்பாடுகளை ஊக்குவிப்பதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
தண்டனையை அறிவித்த நீதிபதி வி.எஸ்.திரிபாதி, இந்த வழக்கு மிகவும் அரிதான வகையைச் சேர்ந்தது என்றும், குற்றவாளிகள் கடுமையான தண்டனைக்கு உரியவர்கள் என்றும் குறிப்பிட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் வழியாக ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான் மற்றும் மும்பைக்கு சென்று பயங்கரவாதச் செயலில் ஈடுபடப்போவதாக விசாரணையின் முடிவுகள் தெரிவிக்கின்றன.விசாரணையில், குற்றவாளிகள் கான்பூர்-உன்னாவ் ரெயில் பாதையில் வெடிகுண்டு வைத்தது தெரியவந்தது.குற்றம் சாட்டப்பட்டவர்கள் உன்னாவோவில் உள்ள கங்கா காட்டில் சோதனை குண்டுவெடிப்பை நடத்தியதாக அரசு வழக்கறிஞர் கூறினார்.
மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் முகமது பைசல், கவுஸ் முகமது கான், முகமது அசார், அதிக் முசாபர், முகமது டேனிஷ், முகமது சையத் மீர் ஹுசைன் மற்றும் ரோகி என்ற ஆசிப் இக்பால் ஆகியோர் அடங்குவர். முகமது அதிப் என்கிற ஆசிப் இரானிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.