பாகிஸ்தானில் இருந்து டிரோன்களில் ஆயுதம் சப்ளை: தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
|பாகிஸ்தானில் இருந்து டிரோன்களில் ஆயுதம் சப்ளை செய்யப்படும் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் காஷ்மீரில் அதிரடி சோதனை நடத்தினர்.
ஜம்மு,
பாகிஸ்தானில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகள் டிரோன்கள் மூலம் காஷ்மீரின் சர்வதேச எல்லையில் ஆயுதங்கள், வெடிபொருட்களை வீசி வருகின்றன. காஷ்மீரில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகளுக்காக இந்த ஆயுதங்கள் வழங்கப்படுகின்றன.
அந்தவகையில் லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான எதிர்ப்பு முன்னணி என்ற பயங்கரவாத அமைப்புக்கு டிரோன்களில் ஆயுதங்கள் சப்ளை செய்யப்பட்ட விவகாரத்தை தேசிய புலனாய்வுத்துறை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கடந்த மே 29-ந்தேதி கதுவா மாவட்டத்தின் ராஜ்பாக் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, பின்னர் தேசிய புலனாய்வுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வரும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று காஷ்மீரில் 8 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக ஜம்மு, ஸ்ரீநகர், கதுவா, சம்பா மற்றும் தோடா மாவட்டங்களில் இந்த சோதனை நடந்தது. இந்த சம்பவம் காஷ்மீரில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.