அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் தாக்குதல் வழக்கு: பஞ்சாப்பில் என்.ஐ.ஏ. சோதனை
|அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் மீது கடந்த மார்ச் மாதம் தாக்குதல் நடத்தப்பட்டது.
சண்டிகர்,
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இந்திய தூதரகம் அமைந்துள்ளது. இந்த தூதரகம் மீது கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி இரவு தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், கடந்த ஜுலை 2ம் தேதி இதே தூதரக கட்டிடத்திற்கு சிலர் தீவைக்க முயற்சித்தனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், தூதரகங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி அமெரிக்காவுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்த தாக்குதலை நடத்தியது விசாரணையில் தெரியவந்தது.
அதேவேளை, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ தூதரகத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பஞ்சாப் மற்றும் அரியானாவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இரு மாநிலங்களிலும் 14 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளுடன் தொடர்புடையவர்களாக கருத்தப்படும் நபர்களுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.