< Back
தேசிய செய்திகள்
மங்களூரு என்ஜினீயரிங் கல்லூரியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை
தேசிய செய்திகள்

மங்களூரு என்ஜினீயரிங் கல்லூரியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை

தினத்தந்தி
|
6 Jan 2023 2:53 AM IST

குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மங்களூருவில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மேலும், கல்லூரியில் படித்து வரும் உடுப்பி மாணவரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

மங்களூரு:

குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மங்களூருவில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மேலும், கல்லூரியில் படித்து வரும் உடுப்பி மாணவரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

பயங்கரவாதி ஷாரிக்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் நாகுரி பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19-ந்தேதி ஆட்டோவில் எடுத்து சென்ற குக்கர் வெடிகுண்டு வெடித்தது. இதில் வெடிகுண்டு எடுத்து சென்ற பயங்கரவாதியான சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா சொப்புகுட்டே பகுதியை சேர்ந்த ஷாரிக் மற்றும் மங்களூருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து நடத்தப்பட்ட போலீஸ் விசாரணையில், ஷாரிக்கிற்கு, பயங்கரவாத அமைப்பு தலைவர்களுடன் தொடர்பு இருந்து வந்ததும், மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் குக்கர் வெடிகுண்டுவை வெடிக்க வைக்க திட்டம் தீட்டியதும் தெரிந்தது.

எனினும் ஆட்டோவில் எடுத்து செல்லும்போது தவறுதலாக குக்கர் குண்டுவில் இருந்த ஜெல் வெடிப்பொருள் தீப்பிடித்தது. ஆனால் அதில் இருந்த டெட்டனேட்டர் வெடிக்கவில்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

கல்லூரி மாணவருக்கு தொடர்பு

இந்த வழக்கு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விவகாரம் என்பதால் குக்கர் குண்டுவெடிப்பு வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. மேலும், படுகாயம் அடைந்த ஷாரிக் சிகிச்சை மற்றும் விசாரணைக்காக பெங்களூருவுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

முன்னதாக வெடிகுண்டு விபத்தில் தொடர்புடைய பயங்கரவாதி ஷாரிக்கின் நண்பர்களான மாஸ் முனீர், சையது யாசின் ஆகியோரை ஏற்கனவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்திருந்தனர். இவர்கள் சிவமொக்கா காட்டுப்பகுதியில் தேசிய கொடியை தீவைத்து எரித்த வழக்கில் கைதானார்கள். இவர்களுடன் ஷாரிக் சேர்ந்து சிவமொக்கா மற்றும் சாம்ராஜ்நகர் மாவட்டம் பந்திப்பூர் வனப்பகுதியில் வெடிகுண்டுகளை தயாரித்து வெடித்து பயிற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்து. இதனால் 3 பேரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் ஷாரிக், மாஸ் முனீர், சையது யாசின் ஆகியோர் மங்களூருவில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் விடுதியில் தங்கியிருந்து படித்ததும் தெரியவந்தது. மேலும் மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு வழக்கில் அந்த கல்லூரியில் படித்து வரும் ஒரு மாணவருக்கு தொடர்பு இருப்பது என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது.

என்.ஐ.ஏ. சோதனை

இதையடுத்து பெங்களூருவில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழு சம்பந்தப்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிக்கு வந்தது. அந்த குழுவினர் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர்.

ேமலும், இதில் தொடர்புடைய கல்லூரி மாணவர் ஒருவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். மேலும் விசாரணைக்காக பெங்களூருவுக்கு அவரை அழைத்து வந்துள்ளனர். அவரிடம் மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரிக்க முடிவு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அந்த மாணவர், உடுப்பி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், இறுதி ஆண்டு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வருவதும் தெரிந்தது.

மேலும் செய்திகள்