மங்களூரு குண்டுவெடிப்பு குறித்து என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு
|மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் இச்சம்பவத்துக்கு பொறுப்பேற்ற பயங்கரவாத அமைப்பு குறித்தும் என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது.
பெங்களூரு:
மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே நாகுரி பகுதியில் கடந்த மாதம்(நவம்பர்) 19-ந் தேதி ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்தது. இதில் ஆட்டோ டிரைவர் புருஷோத்தம், ஆட்டோவில் பயணித்து வந்த பயணி ஷாரிக் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இருவரும் மங்களூருவில் உள்ள பாதர் முல்லர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதில் போலீசார் நடத்திய விசாரணையில் ஷாரிக் பயங்கரவாதி என்பதும், அவர் கர்நாடகத்தில் பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்த ஆயத்தமாகி வந்ததும் தெரியவந்தது. மேலும் அவரே வெடிகுண்டுகளை தயாரித்து வந்ததும் தெரியவந்தது.
தீவிர விசாரணை
இதையடுத்து போலீசார் ஷாரிக்கை கைது செய்தனர். குண்டு வெடிப்பு சம்பவத்தில் அவர் படுகாயம் அடைந்திருப்பதால் அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இவ்வழக்கை கர்நாடக போலீசார், தேசிய புலனாய்வு முகமையிடம்(என்.ஐ.ஏ.) முறைப்படி ஒப்படைத்துவிட்டனர். அதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் இவ்வழக்கு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் நாட்டின் பதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததால் ஷாரிக்கை கைது செய்துள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் அறிக்கை அனுப்பி இருக்கிறார்கள். மேலும் நேற்று மீண்டும் ஒருமுறை மைசூருவில் பயங்கரவாதி ஷாரிக் வசித்த லோகநாயக்கா நகர் 10-வது கிராசில் உள்ள வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பயங்கரவாத அமைப்பு
இந்த நிலையில் ஷாரிக் வசித்த லோகநாயக்கா நகர், வாடகைக்கு குடியிருந்தோர் அனைவரும் தங்களது வீட்டை காலி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அந்த பகுதியே மிகவும் நிசப்தமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஷாரிக் வசித்த வீட்டின் தெருவில் உள்ள அனைத்து வீடுகளும் காலியாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. ஷாரிக் கைது செய்யப்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் அப்பகுதி மக்கள் மீளவில்லை.
இதற்கிடையே மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பொறுப்பேற்றுள்ள இஸ்லாமிக் ரெசிஸ்டன்ஸ் கவுன்சில் எனும் பயங்கரவாத அமைப்பு குறித்தும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.