காஷ்மீரில் இரட்டை குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை
|காஷ்மீரில் இரட்டை குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் தேசிய புலானய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ஜம்மு,
காஷ்மீரின் ஜம்முவில் உள்ள நர்வால் பகுதியில் நேற்று முன்தினம் காலையில் 15 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 9 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். காஷ்மீரில் நடந்து வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பாதயாத்திரை மற்றும் குடியரசு தினவிழாவை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
பயங்கரவாதிகள் சதி
ஆனால் இதையும் மீறி இந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தது பொதுமக்கள் மட்டுமின்றி பாதுகாப்பு படையினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த இரட்டை குண்டுவெடிப்பை பயங்கரவாதிகள் நிகழ்த்தியிருக்கலாம் என பாதுகாப்பு படையினர் சந்தேகித்து வருகின்றனர். எனவே இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.
என்.ஐ.ஏ. அதிகாரிகள்
இந்த நிலையில் இரட்டை குண்டுவெடிப்பு நடந்த பகுதியில் நேற்று தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். சுமார் 1 மணி நேரம் ஆய்வு நடத்திய அவர்கள், மாதிரிகள் மற்றும் தடயங்களை சேகரித்து விசாரணைக்காக எடுத்து சென்றனர். இந்த பயங்கர சம்பவம் குறித்த விசாரணையை என்.ஐ.ஏ. எடுத்துக்கொள்ளும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்கிடையே குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிகளில் நேற்று ராணுவ உயர் அதிகாரிகள் 2-வது நாளாக ஆய்வு செய்தனர்.
ராணுவம் ஆலோசனை
இந்த விசாரணை நடவடிக்கைகளுக்காக சம்பவம் நடந்த பகுதி சீல் வைக்கப்பட்டு மிகுந்த பாதுகாப்பு போடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறம் இருக்க காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் ராணுவம் மற்றும் உளவுத்துறை இணைந்த ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இதில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாவட்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.