< Back
தேசிய செய்திகள்
நாடு முழுவதும் 6 மாநிலங்களில் 51 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 6 மாநிலங்களில் 51 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

தினத்தந்தி
|
27 Sept 2023 9:30 AM IST

காலிஸ்தானிய பயங்கரவாதியான அர்ஷ்தீப் தல்லா மற்றும் லாரன்ஸ் உள்ளிட்ட கும்பலுடன் தொடர்புடைய கூட்டாளிகளின் 51 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை நடத்தி வருகிறது.

புதுடெல்லி,

கனடாவில் காலிஸ்தானியரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்திய அரசால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. தேடப்படும் நபர் பட்டியலிலும் உள்ளார்.

இந்த விவகாரத்தில், இந்தியா மீது கனடா பிரதமர் கூறிய குற்றச்சாட்டு, தொடர்ந்து இரு நாட்டு தூதர்கள் வெளியேற்றம் மற்றும் தூதரக விசா நிறுத்தம் என அடுத்தடுத்த நடவடிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த சூழலில், கனடாவின் வின்னிபெக் நகரில் சில நாட்களுக்கு முன், 2 கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் சுக்தூல் சிங் என்ற மற்றொரு காலிஸ்தான் பயங்கரவாதி கொல்லப்பட்டார். அவர், 2017-ம் ஆண்டு கனடாவுக்கு போலி ஆவணங்கள் மூலம் சென்றுள்ளார் என கூறப்படுகிறது. இவர், அர்ஷ்தீப் தல்லா என்பவரின் நெருங்கிய கூட்டாளியாக செயல்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், கனடாவை சேர்ந்த காலிஸ்தானிய பயங்கரவாதியான அர்ஷ்தீப் தல்லாவுக்கு, பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு உள்ளது என தெரிய வந்தது.

பஞ்சாப்பில் உள்ள இந்து மத தலைவர்களை இலக்காக கொண்டு செயல்பட்ட விவகாரத்தில் அவர் தேடப்படுபவர் என டெல்லி போலீசார் கண்டறிந்தனர். இந்து அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை குறிவைத்து, தல்லா திட்டமிட்டு இருந்த விவரங்களை டெல்லி போலீசார் இந்த ஆண்டு தொடக்கத்தில் கண்டுபிடித்தனர்.

இந்நிலையில், தல்லாவுக்கு சுஹைல் என்ற லஷ்கர்-இ-தொய்பா இயக்க பயங்கரவாதியுடன் தொடர்பு உள்ளது. 25 வழக்குகளில் குற்றவாளியாக தேடப்படும் தல்லா (வயது 27), பஞ்சாப்பின் மொகா பகுதியை சேர்ந்தவர். இவருக்கு எதிராக கொலை, குற்ற சதி திட்டம் மற்றும் ஆயுத சட்டம் மற்றும் போதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இந்த சூழலில், நாடு முழுவதும் 6 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகிறது. 3 வழக்குகள் தொடர்பாக, லாரன்ஸ், பம்பிஹா மற்றும் காலிஸ்தானிய பயங்கரவாதியான அர்ஷ்தீப் தல்லா கும்பலுடன் தொடர்பில் உள்ளவர்களின் 51 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.

இதன்படி, பஞ்சாப்பின் பதிண்டா நகரில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதேபோன்று, பஞ்சாப்பின் மொகா மாவட்டத்தில் தக்துபுரா கிராமத்தில் மதுபான ஒப்பந்ததாரர் ஒருவரின் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.

இவரிடம் அர்ஷ் தல்லா பணய தொகை கேட்டு மிரட்டியுள்ளார். இதனால், குறிப்பிட்ட தொகையை தல்லாவுக்கு அவர் கொடுத்துள்ளார். இதனை அடுத்து என்.ஐ.ஏ.வின் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

இதேபோன்று, உத்தரகாண்டின் உத்தம் சிங் நகரில் பஜ்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு துப்பாக்கி விற்பனை கடையிலும் இந்த சோதனை நடந்தது. உத்தரகாண்டின் டேராடூன் மாவட்டத்தில் கிளெமன்டவுன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மற்றொரு துப்பாக்கி விற்பனை கடையிலும் சோதனை நடத்தப்படுகிறது.

மேலும் செய்திகள்