காங்கிரஸ் அலுவலகத்தில் என்.ஐ.ஏ., அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை
|மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக தீர்த்தகள்ளி காங்கிரஸ் அலுவலகம் மற்றும் மாஸ் முனீர், ஷாரிக் ஆகியோரின் வீடுகளில் என்.ஐ.ஏ., அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சிவமொக்கா:-
குக்கர் குண்டு வெடிப்பு
தட்சிண கன்னட மாவட்டம் மங்களூரு நாகூரி பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 19-ந் தேதி ஆட்டோவில் எடுத்து செல்லப்பட்ட குக்கர் குண்டு வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் மற்றும் குக்கர் குண்டை எடுத்து சென்ற பயங்கரவாதியான சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா சொப்புகுட்டே கிராமத்தைச் சேர்ந்த முகமது ஷாரிக் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். ஆஸ்பத்திரியில் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த குக்கர் குண்டு வெடிப்பு வழக்கை தேசிய புனலாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து
வருகிறார்கள். இதுவரை அவர்கள் ஷாரிக் சென்ற இடங்களுக்கு எல்லாம் நேரில் சென்று பல்வேறு தகவல்களை பெற்றுள்ளனர். மேலும் ஷாரிக்கிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவருடன் யார், யார் தொடர்பில் இருந்தார்கள், யார் உதவி செய்தனர் என்ற விவரங்களை சேகரித்து கைது செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட ஷாரிக்குடன் தொடர்பில் இருந்ததாக கல்லூரி மாணவன் ஒருவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.
தேசிய புலனாய்வு முகமை சோதனை
இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சொப்புகுட்டேவை சேர்ந்த மாஸ் முனீர், ஷாரிக் ஆகியோரின் வீடுகளில் நேற்று தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். 5 கார்களில் 15 பேருக்கும் மேற்பட்ட தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) அதிகாரிகள் மாஸ் முனீர், ஷாரிக்கின் வீடு மற்றும் உறவினர்களின் வீடு, தீர்த்தஹள்ளியில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் என பல இடங்களில் சோதனை நடத்தினர். இதுபோல் தாவணகெரே மாவட்டத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள் சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் மங்களூரு அருகே ஹிரா கல்லூரி பகுதியைச் சேர்ந்த மசீம் அப்துல் ரகுமான், தாவணகெரே மாவட்டம் ஒன்னள்ளி தாலுகா தேவநாயக்கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நதீம் அகமது ஆகிய 2 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள் இருவரும் மாஸ் முனீர் மற்றும் சையது யாசிம் ஆகியோருடன் சேர்ந்து ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாகவும், அதன் அடிப்படையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவர்கள் 2 பேரையும் கைது செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ரகசிய இடத்தில்...
கைதான 2 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து அதிகாரிகள் விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இதை தொடர்ந்து மேலும் சில இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தலாம் என்று கூறப்படுகிறது. இந்த சோதனையால் சொப்புகுட்டே கிராமம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.