< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்

தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பி.எப்.ஐ அமைப்பின் அலுவலகங்களில் நள்ளிரவு முதல் அதிரடி சோதனை!

தினத்தந்தி
|
22 Sept 2022 7:57 AM IST

பி.எப்.ஐ அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ சோதனை நடத்தப்படுகிறது.

சென்னை,

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா(பி.எப்.ஐ) தலைவர் ஓஎம்ஏ சலாம் வீடு உட்பட பி.எப்.ஐ அமைப்பின் மாநில, மாவட்ட அளவிலான தலைவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை( என்ஐஏ ) மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், தமிழ்நாடில் கோயம்புத்தூர், கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட பல இடங்களில் பி.எப்.ஐ அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது. சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பி.எப்.ஐ மாநில தலைமை அலுவலகத்திலும் என்ஐஏ சோதனை நடத்தப்படுகிறது.

பி.எப்.ஐ அமைப்பின் அலுவலகங்களில் நள்ளிரவு முதல் விடிய விடிய சோதனை நடைபெறுகிறது. இந்நிலையில், இதனை கண்டித்து பி.எப்.ஐ கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்தல், பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்புகளில் சேர மக்களை ஊக்குவித்தல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள நபர்களின் குடியிருப்பு மற்றும் அலுவலக வளாகங்களில் தேசிய புலனாய்வு முகமையின் இந்த சோதனை நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு, கேரளா,கர்நாடகா என 10 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய நடவடிக்கையில், என்ஐஏ, அமலாக்கத்துறை மற்றும் மாநில காவல்துறை இணைந்து 100க்கும் மேற்பட்ட பிஎப்ஐ உறுப்பினர்களை கைது செய்துள்ளது.

மேலும் செய்திகள்