குடகில் ஷாரிக் தங்கி இருந்த ரெசார்ட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
|குடகில் ஷாரிக் தங்கி இருந்த ரெசார்ட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பெங்களூரு:
மங்களூரு குண்டுவெடிப்பு
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நாகுரி பகுதியில் கடந்த மாதம் (நவம்பர்) 19-ந்தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் ஆட்டோ டிரைவர் புருஷோத்தம், பயங்கரவாதி ஷாரிக் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மங்களூரு பாதர் முல்லர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில், பயங்கரவாதி ஷாரிக் பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அவர் பயங்கரவாத அமைப்பை நிறுவ முயன்றதுடன், அதற்கு ஆள்சேர்த்ததும் தெரியவந்தது. மேலும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் அவர் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. ஷாரிக்கின் செல்போனை ஆய்வு செய்ததில், அவருக்கு தமிழ்நாடு கோவை மற்றும் நாகர்கோவில், கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர்களுடனும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
என்.ஐ.ஏ. வசம் ஒப்படைப்பு
மேலும் ஷாரிக்கிற்கு டார்க்நெட் என்ற இணையதளம் மூலம் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததும், அவருக்கு வெளிநாடுகளில் இருந்து டாலர்களில் நிதி உதவி வந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் பாதர்முல்லர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஷாரிக்கிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் மற்றும் போலீசார் 6 மணி நேரம் நடத்தி முக்கிய தகவல்களை பெற்றிருந்தனர்.
இந்த நிலையில், மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) வசம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். மேலும் இந்த வழக்கில் போலீசார் நடத்திய விசாரணை அறிக்கையும் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை பெற்று கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள், குண்டுவெடிப்பு வழக்கில் தொடக்கத்தில் இருந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குடகு ரெசார்ட்டில்...
என்.ஐ.ஏ. அதிகாரிகள் 3 குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரு குழுவினர் கர்நாடகத்திலும், மற்றொரு குழுவினர் தமிழ்நாட்டிலும், இன்னொரு குழுவினர் கேரளாவிலும் முகாமிட்டு மங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், பயங்கரவாதி ஷாரிக் குடகு மாவட்டத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் 2 இளம்பெண்களுடன் தங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை தாலுகா டி.ஷெட்டிஹள்ளி அருகே நெம்மலே கிராமத்தில் உள்ள ரெசார்ட்டில் ஷாரிக், 2 இளம்பெண்களுடன் தங்கி உள்ளார். இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள், மங்களூரு போலீசார் குடகில் உள்ள அந்த ரெசார்ட்டுக்கு சென்று சோதனை நடத்தினர்.
உரிமம் இல்லை
அப்போது ரெசார்ட் உரிமையாளரிடம் நடத்திய விசாரணையில், ஷாரிக் மற்றும் 2 பெண்கள் அங்கு வந்து தங்கியதாக தெரிவித்தார். அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த ரெசார்ட் கடந்த 6 மாதங்களாக உரிமம் இல்லாமல் செயல்பட்டு வருவதும், ரெசார்ட்டுக்கு யார், யார் வந்து செல்கிறார்கள் என்பது குறித்த பதிவேடும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து ரெசார்ட் உரிமையாளரை விசாரணைக்காக மங்களூருவுக்கு அழைத்து சென்றுள்ளனர்.