< Back
தேசிய செய்திகள்
தலைமறைவாக உள்ள 2 பேர் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் வெகுமதி; என்.ஐ.ஏ. அதிகாரிகள் அறிவிப்பு
தேசிய செய்திகள்

தலைமறைவாக உள்ள 2 பேர் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் வெகுமதி; என்.ஐ.ஏ. அதிகாரிகள் அறிவிப்பு

தினத்தந்தி
|
21 Jan 2023 12:15 AM IST

தட்சிண கன்னடா மாவட்டத்தில் நடந்த பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேர் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பெங்களூரு:

தட்சிண கன்னடா மாவட்டத்தில் நடந்த பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேர் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பா.ஜனதா பிரமுகர்

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் நெட்டார்(வயது 31). பா.ஜனதா பிரமுகரான இவர் கோழி இறைச்சிக்கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த ஆண்டு(2022) ஜுலை மாதம் 26-ந் தேதி அன்று இரவு இவர் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார். அவர் தால்வார் பகுதியில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவரை வழிமறித்த மர்ம கும்பல், அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 10-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் இச்சம்பவத்தில் கைதான சிலருக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

என்.ஐ.ஏ. விசாரணை

அதன்பேரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் பண்ட்வால் தாலுகா கோடஜேயட்டா பகுதியைச் சேர்ந்த முகமது செரீப்(53), மசூத்(40) ஆகிய 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் வலைவீசி தேடிவருகிறார்கள்.

அவர்கள் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் பெங்களூருவுக்கு வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் தேடினர். இந்த நிலையில் அவர்களைப் பிடிக்க துப்பு கொடுப்போருக்கு தலா ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.10 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

ரகசியமாக வைக்கப்படும்

இவர்கள் இருவரும் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களைப் பிடிக்க துப்பு கொடுப்போரின் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அவர்களைப்பற்றிய தகவல்களை பெங்களூரு டொம்லூரில் உள்ள சர்.எம்.விஸ்வேசுவரய்யா கேந்திரய பவனில் இயங்கி வரும் என்.ஐ.ஏ. அலுவலகத்தில் நேரிலோ அல்லது 080-29510900 என்ற தொலைபேசி எண்ணிலோ, 89042-41100 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டோ தகவல் தெரிவிக்கலாம் என்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்