மேற்கு வங்காளத்தில் அடுத்த அதிரடி: மம்தாவின் நெருங்கிய உதவியாளர் கைது; சி.பி.ஐ. நடவடிக்கை
|மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளரை கால்நடை கடத்தல் வழக்கில் சி.பி.ஐ. கைது செய்து உள்ளது.
பீர்பும்,
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பீர்பும் மாவட்ட தலைவராக இருந்து வருபவர் அனுபிரதா மொண்டல். முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில், பீர்பும் நகரில் உள்ள போல்பூர் பகுதியில் அமைந்த மொண்டலின் இல்லத்திற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று சென்று, கால்நடை கடத்தல் வழக்கில் அவரை கைது செய்து உள்ளது. இதனையடுத்து, அவர் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டு உள்ளார்.
கால்நடை கடத்தல் வழக்கில் கடந்த 5-ந்தேதி மொண்டலுக்கு, சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பியது. அதில், கொல்கத்தா நகரிலுள்ள நிஜாம் பேலஸ் பகுதியில் அமைந்த சி.பி.ஐ. அலுவலகத்தில் 8-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவித்து இருந்தது.
கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந்தேதி எல்லை பாதுகாப்பு படையின் முன்னாள் தளபதி ஒருவரை கால்நடை கடத்தல் வழக்கில் சி.பி.ஐ. கைது செய்து இருந்தது. அவரிடம் நடந்த விசாரணையில், இந்த விவகாரத்தில் அனுபிரதா மொண்டலின் தொடர்பு வெளிச்சத்திற்கு வந்தது.
மேற்கு வங்காளத்தில் ஆசிரியர்கள் நியமன ஊழலில் ரூ.20 கோடிக்கும் கூடுதலான பணபரிமாற்றங்கள் நடந்தது பற்றிய விசாரணையில், முன்னாள் கல்வி மந்திரி பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டார். அவரது உதவியாளர் மற்றும் நடிகையான ஆர்பிடா முகர்ஜியும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் அடுத்த அதிரடியாக முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளரை கால்நடை கடத்தல் வழக்கில் சி.பி.ஐ. கைது செய்து உள்ளது.