அடுத்த 30-40 ஆண்டுகள் பாஜகவின் காலம்தான்: தேசிய செயற்குழு கூட்டத்தில் அமித்ஷா பேச்சு
|இந்தியா உலக நாடுகளின் தலைவராக உருவெடுக்கும் என்றும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் அமித்ஷா பேசினார்.
ஐதராபாத்,
பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் ஐதரபாத் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
செயற்குழு கூட்டத்தில் அரசியல் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய அமித்ஷா கூறும் போது, நாட்டில் அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் பாஜகவின் காலமாகவே இருக்கும். இந்தியா உலக நாடுகளின் தலைவராக உருவெடுக்கும். குடும்ப அரசியல், ஜாதியவாதம் மற்றும் திருப்தி படுத்தும் அரசியல் ஆகியவை மிகப்பெரும் பாவங்களாக உள்ளன. இந்தியா பல ஆண்டுகளாக துன்பங்களை அனுபவிப்பதற்கு இதுவே காரணம் ஆகும்" என்று கூறினார்.
அமித்ஷா பேசியதன் சாராம்சங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வ ஷர்மா கூறுகையில், "வளர்ச்சி அரசியல் மற்றும் செயல்படும் அரசியல் கொண்ட பாஜகவை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். பாஜகவின் சமீபத்திய தொடர் வெற்றிகள் இதையே காட்டுகிறது. தெலுங்கனா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் குடும்ப ஆட்சியை பாஜக முடிவுக்கு கொண்டு வரும். அதேபோல், தமிழகம் , ஆந்திர பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் அதிகாரத்தை பாஜக எட்டும்" என அமித்ஷா கூறியதாக குறிப்பிட்டார்.