< Back
தேசிய செய்திகள்
செய்தித்தாள் விநியோகம் செய்பவரும் அப்துல் கலாம் போல் ஆக முடியும் - ராஜ்நாத் சிங் பேச்சு
தேசிய செய்திகள்

"செய்தித்தாள் விநியோகம் செய்பவரும் அப்துல் கலாம் போல் ஆக முடியும்" - ராஜ்நாத் சிங் பேச்சு

தினத்தந்தி
|
20 May 2022 11:39 AM GMT

இந்தியாவில் கூட நன்கு படித்தவர்கள் சிலர் பயங்கரவாத செயல்களில் ஈடுபவதாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள டாக்டர் பி.ஒய்.பட்டீல் வித்யாபித் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய அவர் கல்வியை பயன்படுத்தும் நோக்கம் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதலை நிகழ்த்தியவர்கள், மிகவும் கடினமான விமான பயிற்சியை மேற்கொண்ட இளம் வயதினர்களாக இருந்தனர் என்று ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். இந்தியாவில் கூட நன்கு படித்தவர்கள் சிலர் பயங்கரவாத செயல்களில் ஈடுபவதாக அவர் கூறினார்.

அமெரிக்க அரசியல் விமர்சகர் தாமஸ் எல்.பிரெய்ட்மான் எழுதிய கட்டுரையை மேற்கோள் காட்டி பேசிய அவர், "அல்-கொய்தா இயக்கம் மற்றும் இன்போசிஸ் நிறுவனம், என இரண்டிலும் நன்கு படித்தவர்கள், கொள்கை மற்றும் உறுதி கொண்டவர்கள் உள்ளனர். ஆனால் இரண்டிற்குமான வித்தியாசம் என்னவென்றால், அல்-கொய்தா 9/11 தாக்குதலை நிகழ்த்தியது, இன்போசிஸ் நிறுவனம் மக்களுக்காக வேலை செய்கிறது" என்றார்.

மிகப்பெரிய செல்வந்தர் ஒருவர், ஒசாமா பின் லேடன் போல் ஆகிவிட முடியும், அதே நேரம் செய்தித்தாள் விநியோகம் செய்யும் ஒருவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் போல் ஆகவும் முடியும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார். வாழ்வின் நெறிமுறைகள் தான் இந்த இரண்டு பாதைகளின் அடிப்படை வேறுபாடுகளாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்