< Back
தேசிய செய்திகள்
உபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட இணையதள நிறுவனருக்கு 7 நாள் காவல் - டெல்லி கோர்ட்டு உத்தரவு
தேசிய செய்திகள்

'உபா' சட்டத்தில் கைது செய்யப்பட்ட இணையதள நிறுவனருக்கு 7 நாள் காவல் - டெல்லி கோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
5 Oct 2023 12:25 AM IST

‘உபா’ சட்டத்தில் கைது செய்யப்பட்ட இணையதள நிறுவனருக்கு 7 நாள் காவல் விதித்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நியூஸ்கிளிக் என்ற செய்தி இணையதளம் சீன ஆதரவு பிரசாரத்துக்காக அந்த நாட்டில் இருந்து பணம் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பயங்கரவாத எதிர்ப்பு 'உபா' சட்டத்தின் கீழ் அந்த நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்த வழக்கை விசாரித்து வரும் டெல்லி போலீசார் நேற்று முன்தினம் இந்த நிறுவனம் தொடர்பான 30-க்கு மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து நியூஸ்கிளிக் நிறுவனர் பிரபிர் பர்கயஸ்தா, மனிதவளப்பிரிவு அதிகாரி அமித் சக்கரவர்த்தி ஆகியோரை கைது செய்தனர். டெல்லியில் உள்ள இந்த நிறுவனத்தின் அலுவலகமும் சீல் வைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று முன்தினம் இரவு நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, அவர்கள் இருவரையும் 7 நாள் போலீஸ் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தங்கள் மீதான வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) நகலை வழங்குமாறு பிரபிர் பர்கயஸ்தா, கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதை நேற்று விசாரித்த நீதிபதி ஹர்தீப் கவுர், இது தொடர்பாக பதிலளிக்க போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இதற்கிடைய தேச பாதுகாப்புக்கு எதிரான வலுவாக ஆதாரத்தின் அடிப்படையிலேயே நியூஸ்கிளிக் நிறுவனர் மற்றும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக பா.ஜனதா கூறியுள்ளது.

மேலும் செய்திகள்