< Back
தேசிய செய்திகள்
கள்ளக்காதலனுடன் தனிமையில் உல்லாசம்: இடையூறாக இருந்த கணவர்... மனைவி செய்த கொடூரம்
தேசிய செய்திகள்

கள்ளக்காதலனுடன் தனிமையில் உல்லாசம்: இடையூறாக இருந்த கணவர்... மனைவி செய்த கொடூரம்

தினத்தந்தி
|
8 April 2024 11:19 AM IST

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி கோரிமேடு ஞானப்பிரகாசம் நகர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 48). பெயிண்டர். இவரது மனைவி ஷர்மிளா தேவகிருபை (44). வினோபா நகரில் வாடகை வீட்டில் வசித்தனர். கடந்த 19-ந் தேதி இரவு பாஸ்கருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினார்.

இது குறித்து கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். பாஸ்கர் உடல் பிரேத பரிசோதனை செய்ததில், அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், பாஸ்கரின் மனைவி மீது சந்தேகம் அடைந்து அவரிடம் விசாரித்தனர்.

அப்போது ஷர்மிளா தேவகிருபை தனது கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் உதவியுடன் கணவரை கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஷர்மிளா தேவகிருபை, அவரது கள்ளக்காதலன் கடலூரை சேர்ந்த சேகர் (43), அவரது நண்பர் நெல்லித்தோப்பை சேர்ந்த மணிகண்டன் (37) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மற்றொரு நண்பரான முதலியார்பேட்டையை சேர்ந்த ஆனந்தன் (32) என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

கொலை குறித்து ஷர்மிளா தேவகிருபை போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

கடலூர் சின்னப்பன் நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சேகர் என்ற சந்திரதேவன் புதுச்சேரி சுந்தரமேஸ்திரி வீதியில் கடந்த 15 வருடமாக தையல் கடை நடத்தி வந்தார். அவரது கடையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நான் வேலைக்கு சேர்ந்தேன். எனக்கும், அவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. நாங்கள் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தோம்.

இது எனது கணவருக்கு தெரிந்ததால், அவர் என்னை கண்டித்ததோடு வேலைக்கு செல்லக்கூடாது என்று கூறி தடுத்து நிறுத்தி விட்டார். என்னால் சேகரை சந்திக்காமல் இருக்க முடியவில்லை. எனவே நான் சேகரிடம் எனது கணவரை கொலை செய்யும்படி கூறினேன். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.

இதற்கு சேகர் தனது நண்பர்களான மணிகண்டன், ஆனந்தன் ஆகியோரின் உதவியை நாடினார். ஏற்கனவே நாங்கள் திட்டமிட்டபடி கடந்த 5-ந் தேதி மணிகண்டன், ஆனந்தன் ஆகியோர் பாஸ்கரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பெயிண்ட் அடிக்க வேண்டும் என்று கூறினர். பின்னர் இடத்தை பார்க்க அழைத்து செல்வதாக கூறி ஆட்டோவில் வந்து அழைத்து சென்றனர்.

கோரிமேடு அருகே மறைவான இடத்திற்கு சென்றபோது அங்கு நின்று கொண்டு இருந்த சேகரும் அவர்களுடன் சேர்ந்து பாஸ்கரின் கழுத்தை நொித்து கொலை செய்தார். பின்னர் உடலை ஆட்டோவில் எங்கள் வீட்டிற்கு கொண்டு வந்தனர்.

அங்கு ரெடியாக நின்று கொண்டு இருந்த நான், அதே ஆட்டோவில் ஏறிக்கொண்டு, எனது கணவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக நாடகம் ஆடியபடி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றேன். அங்கு டாக்டர்கள் அவர் இறந்த விட்டதாக கூறிய உடன் நான் வீட்டிற்கு வந்தேன். ஆனால் பிரேத பரிசோதனையில் எனது கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்தது அம்பலமானது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து போலீசார் ஷர்மிளா தேவகிருபை, சேகர், மணிகண்டன் ஆகிய 3 பேரையும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்