ஐதராபாத்தில் குளியலறையில் புதுமண டாக்டர் தம்பதி மர்ம மரணம்
|தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் புதுமண டாக்டர் தம்பதி குளியலறையில் மர்ம மரணம் அடைந்து கிடந்தது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
ஐதராபாத்,
தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் காதர்பாக் பகுதியில் வசித்து வந்தவர் சையது நிசாருதீன் (வயது 26). டாக்டரான இவருடைய மனைவி உம்மி மொகிமீன் சைமா (வயது 22).
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்து உள்ளது. சையது, சூரியாபேட்டையில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்துள்ளார்.
சமீபத்தில் சூரியாபேட்டை பகுதியில் இருந்து ஐதராபாத்துக்கு, புதிதாக திருமணம் முடித்த இந்த தம்பதி வந்துள்ளது. இந்நிலையில், நேற்றிரவு தனது மகளிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வராத சந்தேகத்தில் அவரது தந்தை, வீட்டுக்கு சென்றுள்ளனர். இதில், புதுமண தம்பதி குளியலறையில் மர்ம மரணம் அடைந்து கிடந்து உள்ளனர். இதுபற்றி விசாரணை அதிகாரியான காவல் துணை ஆய்வாளர் எஸ். ஸ்ருதி கூறும்போது, நேற்று முன்தினம் காலையில் சம்பவம் நடந்திருக்க கூடும்.
ஆனால், மாலை வரை யாரும் அதனை கவனிக்கவில்லை. அன்றிரவு 11.30 மணியளவிலேயே தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு சென்றோம். மனைவியை காப்பாற்ற சென்ற இடத்தில் கணவர் உயிரிழந்து இருக்க கூடும் என அவர் கூறியுள்ளார்.
சையது, மின்சார தாக்குதல் ஏற்பட்ட தனது மனைவியை காப்பாற்ற சென்றிருக்க கூடும். அதில், மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்க கூடும் என அவரது தந்தை கூறியுள்ளார். குளியலறையில் மின் இணைப்பு தவறுதலாக மாற்றி கொடுத்திருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.
இருவரது உடல்களும் உஸ்மானியா பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. போலீசாரின் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. திருமணம் முடிந்த புதுமண டாக்டர் தம்பதி இருவரும் உயிரிழந்து கிடந்தது அந்த பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.