தமிழ்நாடு காங்கிரசுக்கு புதிய தலைவர்? - டெல்லி தலைமை ஆலோசனை
|தமிழ்நாடு காங்கிரசுக்கு புதிய தலைவர் யார் என்பது குறித்து டெல்லி தலைமை ஆலோசனை நடைபெற்றது.
புதுடெல்லி,
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக இருப்பவர் கே.எஸ்.அழகிரி. இவர் மாநில தலைவராக பொறுப்பேற்று 4 ஆண்டுக்கும் மேல் ஆகிறது. காங்கிரஸ் கட்சியில் பொதுவாக 3 ஆண்டுகளுக்கு மேல் தலைவர் பதவியில் மாற்றம் எதிர்பார்க்கப்படும். ஆனால் கே.எஸ்.அழகிரி அதையும் தாண்டி மாநில தலைவராக நீடித்து வருகிறார்.
இதற்கிடையே தமிழ்நாடு மட்டுமின்றி தெலுங்கானா உள்ளிட்ட 4 மாநிலங்களில் மாநில தலைவர்கள் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லி சென்றுள்ளார். அவர் நேற்று தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்திப்பார் என கூறப்பட்டது. ஆனால் நேற்றைய தினம் தெலுங்கானா காங்கிரஸ் மற்றும் கேரளா காங்கிரஸ் நிர்வாகிகளுடனான சந்திப்பு காரணமாக கே.எஸ்.அழகிரி தேசிய தலைவரை சந்திக்க முடியாமல் போனது.
அவருக்கு தேசிய தலைவரை சந்திக்க இன்று (செவ்வாய்க்கிழமை) வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இந்த சந்திப்புக்கு பிறகே மாநில தலைவர் மாற்றம் குறித்த தகவல்கள் தெரிய வரும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
மாநில தலைவராக புதியவர் நியமிக்கப்படுவதாக இருந்தால் கிருஷ்ணகிரி எம்.பி. டாக்டர் செல்லக்குமார், கரூர் எம்.பி. ஜோதிமணி, திருச்சி எம்.பி. சு.திருநாவுக்கரசர், விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஆகியோர் முக்கியமானவர்கள்.
இது தவிர முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்தில் பெயரும் அடிபடுகிறது. இவர் சமீபத்திய கர்நாடக தேர்தல் வெற்றிக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. தலைவருக்கான போட்டி பட்டியலில் இவரும் இருக்கிறார்.