ஏழைகள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க புதிய சட்டம்
|கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள ஏழை மக்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று மந்திரி எச்.கே.பட்டீல் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:-
பெங்களூருவில் நேற்று சட்டம் மற்றும் சட்டசபை விவகாரத்துறை மந்திரி எச்.கே.பட்டீல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
புதிய சட்டம் கொண்டு வரப்படும்
மாநிலத்தில் ஏழை மக்கள் மீது தொடரப்பட்ட மற்றும் ஏழை மக்களால் கோர்ட்டுகளில் தொடரப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் கோர்ட்டுகளில் நிலுவையில் இருந்து வருகிறது. நிலுவையில் உள்ள இந்த வழக்குகளால் ஏழை மக்களுக்கு நியாயம் கிடைக்காமல் உள்ளது. ஏழை மக்களால் தொடரப்பட்ட வழக்குகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும்.
இதற்காக மாநிலத்தில் புதிய சட்டத்தை கொண்டு வருவதற்கு அரசு முன்வந்துள்ளது. இந்த புதிய சட்டத்திற்கான மசோதா கூடிய விரைவில் தயார் செய்யப்படும். சட்டசபை மற்றும் மேல்-சபையில் அந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இதன்மூலம் ஏழைகளுக்கு விரைவில் நீதி கிடைக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
மத்திய அரசே காரணம்
நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு மத்திய அரசும், ரிசர்வ் வங்கி கொண்டு வந்த விதிமுறைகளே காரணமாகும். விலை உயர்வுக்கு மாநில அரசு காரணம் இல்லை. பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், கியாஸ் சிலிண்டர்களின் விலையை நிர்ணயம் செய்வது கட்டுக்குள் கொண்டு வருவது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதற்கான பொறுப்பும் மத்திய அரசு தான் இருக்கிறது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் பொறுப்பு மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. இந்த விவகாரத்தில் மாநில அரசுகளின் தலையீடு சிறிதும் இல்லை. அதே நேரத்தில் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு மாதம் தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை காங்கிரஸ் அரசு கொண்டு வந்துள்ளது.
உண்மைக்கு புறம்பானது
காங்கிரஸ் அரசு வழங்கும் இந்த ரூ.2 ஆயிரம் திட்டத்தின் மூலமாக விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். அதிகாரிகள் பணி இடமாற்றத்தில் லஞ்சம் பெறப்படுவதாக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி குற்றச்சாட்டு கூறுவது உண்மைக்கு புறம்பானது. அதுபற்றி ஆவணங்களை கொடுத்தால் விசாரணை நடத்த அரசு தயாராக உள்ளது.
எங்கள் அரசு மீது குற்றச்சாட்டுகளை கூறுபவர்கள் ஆவணங்களை வழங்கினால், அதுபற்றி விசாரிக்க தயாராக இருப்பதாக முதல்-மந்திரி சித்தராமையா கூட தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.