< Back
தேசிய செய்திகள்
பெங்களூரு தனியார் மருத்துவமனையில் புதிய கட்டிடம் இடிந்து தொழிலாளி சாவு

பெங்களூரு நிருபதுங்கா சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வந்த பால்கனி கட்டிடம் இடிந்து விழுந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

தேசிய செய்திகள்

பெங்களூரு தனியார் மருத்துவமனையில் புதிய கட்டிடம் இடிந்து தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
1 Jun 2022 2:43 AM IST

பெங்களூரு தனியார் மருத்துவமனையில் புதிய கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மேலும் இடிபாடுகளில் சிக்கிய 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

பெங்களூரு:

புதிய கட்டிடம் இடிந்தது

பெங்களூரு அல்சூர்கேட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நிருபதுங்கா சாலையில் செயின்ட் மார்த்தாஸ் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனையின் நுழைவு வாயில் பகுதியில் புதிதாக 50 அடி உயரத்தில் பால்கனி கட்டும் பணி கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது.

இந்த பணியில் ராய்ச்சூர் மாவட்டம் மஸ்கியை சேர்ந்த மொய்னுதீன், ஜான்பாஷா, முகமது ரபீசாப், பசவராஜ் ஆகிய 4 தொழிலாளா்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று காலை 6 மணியளவில் புதிதாக கட்டப்பட்டு வருரும் பால்கனி கட்டிடத்தின் மேல் பகுதியில் நின்று கொண்டு 4 பேரும் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென பால்கனி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 4 தொழிலாளர்களும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி கொண்டனர்.

தொழிலாளி சாவு

இதுபற்றி அறிந்ததும் அல்சூர்கேட் போலீசார், தீயணைப்பு படையினர் அந்த ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கிய 4 தொழிலாளர்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் மொய்னுதீனும், ஜான்பாஷாவும் படுகாயத்துடன் மீட்கப்பட்டு அந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் முகமது ரபீசாப்பும் மீட்கப்பட்டார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பசவராஜை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வந்தது. ஆனாலும் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் பசவராஜ் பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சோகம்

இந்த சம்பவம் குறித்து அல்சூர்கேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தனியார் ஆஸ்பத்திரி கட்டிடம் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்