அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக சபரிமலை அருகே புதிய விமான நிலையம் - நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு
|சபரிமலை கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்ய வருகிறார்கள்.
திருவனந்தபுரம்,
சபரிமலை கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்ய வருகிறார்கள். எனவே சபரிமலை அருகே பக்தர்களின் வசதி கருதி விமான நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அது நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டது.
இந்தநிலையில் சபரிமலை எருமேலி அருகே புதிய விமான நிலையம் அமைக்க மத்திய நாடாளுமன்ற குழு ஒப்புதல் அளித்தது. இதை தொடர்ந்து சபரிமலை அருகே எருமேலி தெற்கு, மணிமலை ஆகிய இடங்களில் 2,570 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த கேரள அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
இதற்கான ஆரம்பக் கட்ட ஆய்வு பணியை அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம் செய்ய இருக்கிறது. புதிய விமான நிலையம் 3,500 மீட்டர் விமான ஓடுபாதையுடன் அமைய இருப்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் ஏற்கனவே திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 4 இடங்களில் விமான நிலையங்கள் உள்ளன. எனவே 5-வதாக சபரிமலை அருகே புதிய விமான நிலையம் அமைய உள்ளது.