பெங்களூருவில் மழை வெள்ள பாதிப்புக்கு, காங்கிரஸ் அரசே காரணம்- பசவராஜ் பொம்மை
|பெங்களூருவில் மழை வெள்ள பாதிப்புக்கு முந்தைய காங்கிரஸ் அரசே காரணம் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரசே காரணம்
பெங்களூருவில் கடந்த 4-ந் தேதி இரவு கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சர்ஜாப்புரா, மாரத்தஹள்ளி, மகாதேவபுரா, பொம்மனஹள்ளி, இந்திராநகர், எச்.ஏ.எல். உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வீடுகளில் சிக்கியுள்ள குடியிருப்புவாசிகள் ரப்பர் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள். பெல்லந்தூர் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் ஏரி, குளங்கள், நீர் நிலைகள் மற்றும் அவற்றின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டிடங்களை கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. அதனால் பெங்களூருவில் தற்போது ஏற்பட்டுள்ள மழை-வெள்ள பாதிப்புக்கு காங்கிரஸ் கட்சியே காரணம்.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஆனால் அதைத்தொடர்ந்து நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஏரிகளை நிர்வகிக்கும் பணியை ஒரு சவாலாக ஏற்று மேற்கொண்டு வருகிறோம். நகரில் ராஜகால்வாய்களை மேம்படுத்த ரூ.1,500 கோடி நிதியை ஒதுக்கியுள்ளோம். நேற்று(நேற்று முன்தினம்) ரூ.300 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றியுள்ளோம். தரமான முறையில் ராஜகால்வாய்களை அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூருவில் வரலாறு காணாத மழை பெய்ததாக சொல்ல முடியாது. கடந்த 90 ஆண்டுகளில் இத்தகைய மழை பெய்யவில்லை. அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளன. சில ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகின்றன. இன்னும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையால் ஒட்டுமொத்த பெங்களூருவும் பாதிக்கப்பட்டுள்ளது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். அது தவறு.
இயல்புநிலை திரும்ப...
மகாதேவபுரா, சர்ஜாப்புரா பகுதிகள் தான் கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. மகாதேவபுராவில் மட்டும் 69 ஏரிகள் உள்ளன. அந்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.