< Back
தேசிய செய்திகள்
நேபாள வாலிபர் கத்தியால் குத்திக்கொலை
தேசிய செய்திகள்

நேபாள வாலிபர் கத்தியால் குத்திக்கொலை

தினத்தந்தி
|
26 Jun 2023 12:15 AM IST

மது குடிக்க சென்றபோது, கத்தியால் குத்தி நேபாள வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக அவரது நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெல்லந்தூர்:-

நேபாளத்தை சேர்ந்தவர்

நேபாளத்தை சேர்ந்தவர் டேவிட் (வயது 20). இவர் பெங்களூருவில் உள்ள ஓட்டல் ஒன்றில் சமையலராக உள்ளார். இதற்காக அவர் பெல்லந்தூர் பகுதியில் தங்கி இருந்தார். அவருக்கு அதே பகுதியை சேர்ந்த நேபாளத்தை சேர்ந்தவர்கள் பல நண்பர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் அவர் தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள மதுக்கடைக்கு சென்றார். மேலும் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்தார். இதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டார்.

கத்திக்கொலை

அப்போது அவருக்கும், அவரது நண்பர் ஒருவருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அவர் டேவிட்டை கடுமையாக தாக்கினார். மேலும் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, டேவிட்டின் மார்பில் சரமாரியாக குத்தினார்.

இதில் ரத்தவெள்ளத்தில் டேவிட் சரிந்து விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற நண்பர்கள், உடனடியாக டேவிட்டை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

குடிபோதை தகராறில்...

இதுகுறித்து பெல்லந்தூர் போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் டேவிட் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் விசாரணை நடத்தினர். அப்போது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துவிட்டு சென்றபோது, ஏற்பட்ட தகராறில் இந்த கொலை சம்பவம் நடந்து இருப்பது தெரிந்தது.

மேலும் முன்விரோதம் காரணமாக நேபாளத்தை சேர்ந்த டேவிட்டை, அவரது நண்பரே கொன்றதும் தெரிந்தது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கொலையாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்