அயோத்தி ராமர் கோவில் சிலைகளுக்காக நேபாளத்தில் இருந்து பாறைகள் அனுப்பப்படும் என தகவல்
|ராமர் கோவில் சிலைகளுக்காக நேபாளத்தில் இருந்து பாறைகளை அனுப்ப உள்ளதாக அந்நாட்டின் முன்னாள் துணை பிரதமர் பிமலேந்திர நிதி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகளுக்கு கடந்த 2020-ம் ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து கோவில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிகளை மேற்பார்வையிட ராம ஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் முதல் தள பணிகள் இந்த ஆண்டு முடிவடைய உள்ளது.
இந்நிலையில் கோவிலில் அமையும் ராமர், சீதா சிலை தயாரிப்பதற்காக நேபாளத்தில் உள்ள கண்டகி நதிக்கரையில் இருந்து 2 பெரிய பாறைகளை அனுப்ப உள்ளதாக அந்நாட்டின் முன்னாள் துணை பிரதமர் பிமலேந்திர நிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் போது அவர் கூறியதாவது;-
"நேபாளத்தை சேர்ந்த ஜனக மன்னனின் மகள் சீதை என்று புராணங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ராமர் பிறந்தநாளையும், ராமர் - சீதையின் திருமண நாளையும் ஜனக்பூர் மக்கள் கொண்டாடுகின்றனர். அயோத்தியுடன் எங்களுக்கு பல நூற்றாண்டுகள் பழமையான பந்தம் உள்ளது.
எனவே தான் ராமர், சீதை சிலைகளுக்காக 2 பெரிய பாறைகளை அனுப்ப முடிவு செய்தோம். கடந்த டிசம்பரில் நேபாள அரசிடம் இருந்து பாறைகளை அனுப்புவதற்காக அனுமதி கிடைத்தது. ராமர், சீதை சிலைகள் தயாரிக்க 18 டன் மற்றும் 12 டன் எடை கொண்ட 2 பெரிய பாறைகளை தேர்வு செய்தோம். அந்த பாறைகளை கடந்த 15-ந் தேதி முதல் பூஜை செய்யப்பட்டு வருகிறது.
இந்த பாறைகள் வருகிற 1-ந்தேதி அயோத்திக்கு கொண்டு செல்லப்படும். இதன்மூலம் நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான மத உறவுகள் வலுப்படும்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.