விமான விபத்து: அமைச்சரவையின் அவசர கூட்டத்திற்கு நேபாள பிரதமர் அழைப்பு
|நேபாள விமான விபத்து தொடர்பாக அமைச்சரவையின் அவசர கூட்டத்திற்கு அந்நாட்டு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
காத்மாண்டு,
நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் உள்பட 72 பேருடன் வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 5 இந்தியர்கள் உள்பட 68 பேர் உயிரிழந்தனர்.
தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக எழுந்த தொழில்நுட்ப கோளாறுகளால் பயணிகள் விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது என்றும், அங்கு நிலவிய காலநிலையும் விமான விபத்துக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இந்த விபத்தில் பலியானவர்களில் 5 இந்தியர்கள் உட்பட 68 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.
இந்நிலையில் நேபாள விமான விபத்து தொடர்பாக அமைச்சரவையின் அவசர கூட்டத்திற்கு அந்நாட்டு பிரதமர் புஷ்ப கமல் தகால் அழைப்பு விடுத்துள்ளார். கூட்டத்திற்கு அழைப்பு விடுத்ததோடு, நாட்டின் உள்துறை அமைச்சகம், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் உடனடி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.