'காஷ்மீர் பிரச்சினையில் நேரு செய்த பிழை' மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தாக்கு
|நாடாளுமன்ற மாநிலங்களவையில் காஷ்மீர் தொடர்பாக 2 மசோதாக்கள் நேற்று நிறைவேற்றப்பட்டன.
புதுடெல்லி,
காஷ்மீரில் புலம்பெயர் சமூகத்தில் இருந்து 2 பேர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வந்தவர்களில் ஒருவர் என 3 பேரை காஷ்மீர் சட்டசபைக்கு நியமன உறுப்பினர்களாக நியமிக்க வகை செய்யும் திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதைப்போல காஷ்மீரில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யவும் மசோதா கொண்டு வரப்பட்டது. காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா மற்றும் காஷ்மீர் இடஒதுக்கீடு (திருத்தம்) மசோதா எனப்படும் இந்த 2 மசோதாக்கள் மீதும் விவாதம் நடந்தது.
இதைத்தொடர்ந்து உள்துறை மந்திரி அமித்ஷா விவாதங்களுக்கு பதிலளித்து பேசினார். அப்போது அவர், புதிய மற்றும் வளர்ந்த காஷ்மீருக்கான தொடக்கம் இது என தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் காஷ்மீர் பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
அதேநேரம் நாட்டின் முதல் பிரதமர் நேருவின் இரண்டு பிழைகளான, காஷ்மீரில் தவறான நேரத்தில் மேற்கொண்ட போர் நிறுத்தம் மற்றும் காஷ்மீர் பிரச்சினயை ஐ.நா.வில் எடுத்துச்சென்றது ஆகியவற்றால் அந்த பிராந்தியம் பெரும் பாதிப்பை சந்தித்தது என்றும் அவர் குற்றம் சாட்டினார். அவரது பதிலுரையை தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதாக்கள் நிறைவேறின.