< Back
தேசிய செய்திகள்
நீட் தேர்வு ரத்தாகிறதா...? பெரும் எதிர்பார்ப்புக்கிடையே சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

நீட் தேர்வு ரத்தாகிறதா...? பெரும் எதிர்பார்ப்புக்கிடையே சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

தினத்தந்தி
|
11 July 2024 5:36 AM GMT

நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக தேசிய தேர்வு முகமை சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் ஒன்றை நேற்று தாக்கல் செய்தது.

புதுடெல்லி,

கடந்த மே மாதம் 5ம் தேதி நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடந்தது. அதன்பிறகு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சர்ச்சை கிளம்பியது. அதன்படி தேர்வுக்கு முன்பாகவே நீட் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. மேலும் 1,500க்கும் அதிகமானவர்களுக்கு கருணை மதிப்பெண் கொடுக்கப்பட்டதும் விவாதத்தை கிளப்பியது. அதுமட்டுமின்றி 67 பேருக்கு முழு மதிப்பெண் கொடுத்ததும் சர்ச்சையை கிளப்பியது. அதுமட்டுமின்றி ஆள்மாறாட்ட புகாரும் கிளம்பியது.

இதனால் இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். புதிதாக மாற்று தேதியில் நீட் தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. மேலும் இதுதொடர்பாக ஏராளமான மனுக்கள் சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மொத்தமாக சேர்த்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக தேசிய தேர்வு முகமை சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் ஒன்றை நேற்று தாக்கல் செய்தது. அதில், நீட் தேர்வை ரத்து செய்வது தவறிழைக்காத லட்சக்கணக்கான மாணவர்களுக்கு அநீதி இழைப்பது போன்றது. பாட்னாவில் நடந்ததாகக் கூறப்படும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் வினாத்தாள் நகல்கள் தவறான வழிகளில் முறைகேடுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது போன்ற முறைகேடுகள் வழியாக பயனடைந்த மாணவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைந்துள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு என்பது தேசிய தேர்வுகள் முகமை இயந்திரத்தின் ஒட்டுமொத்த குற்றம் அல்ல அது ஒரு சிறிய சம்பவம்தான். 61 மாணவர்கள் 720/720 மதிப்பெண் பெற்றதற்கு பாடத்திட்டம் குறைக்கப்பட்டதுதான் மிக முக்கிய காரணம். மத்திய அமைப்புகளின் விரிவான விசாரணைக்கு பிறகுதான் ஒட்டுமொத்த அமைப்பும் தவறிழைத்துள்ளதா என்பது பற்றிக் கூற முடியும். 2024 இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் 63 முறைகேடு புகார்கள் தேசிய தேர்வு முகமையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு தொடர்பான அனைத்து மனுக்களையும் அபராதம் விதித்து தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அந்த பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே சென்னை ஐ.ஐ.டி.யின் ஆய்வறிக்கையை மேற்கோள்காட்டி நீட் தேர்வில் பெரிய அளவில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என்று சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற உள்ளது. இந்த வழக்கின் இன்றைய விசாரணையில் நீட் தேர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகுமா என்பது குறித்து மாணவர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்