நீட் வினாத்தாள் கசிவு: முக்கிய குற்றவாளி உள்பட மேலும் 2 பேர் கைது
|நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளி உள்பட மேலும் 2 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
டெல்லி,
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 5ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 25 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர். நீட் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 4ம் தேதி வெளியானது.
இதனிடையே, நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, பீகார் தலைநகர் பாட்னாவில் சில தேர்வு மையங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல், குஜராத், ராஜஸ்தான், மராட்டியம் போன்ற மாநிலங்களில் நீட் தேர்வின்போது மாணவ-மாணவிகள் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க மத்திய அரசு பரிந்துரை செய்தது.
இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த சிபிஐ பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது. மேலும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக ஏற்கனவே 12 பேரை கைது செய்திருந்தது.
இந்நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் முக்கிய குற்றவாளி உள்பட மேலும் 2 பேரை சிபிஐ இன்று கைது செய்துள்ளது. பாட்னாவில் கைது செய்யப்பட்ட பங்கஜ் குமார் என்பவர் ஜார்க்கண்ட் மாநிலத்தவர் என்பது தெரியவந்துள்ளது. இவர் ஜார்க்கண்ட்டில் உள்ள தேசிய தேர்வு முகமை அலுவலகத்தில் இருந்து நீட் தேர்வு வினாத்தாளை திருடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த வழக்கில் மற்றொரு நபரான ராஜூ சிங் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட்டில் கைது செய்யப்பட்ட ராஜூ சிங் நீட் தேர்வு வினாத்தாளை திருட பங்கஜ் குமாருக்கு உதவி செய்துள்ளார். இதன் மூலம் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது.