நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதற்கு எதிரான மனு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
|நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதற்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
புதுடெல்லி,
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் சுமார் 24 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வு முடிவுகள் இந்த மாதம் 4-ந்தேதி வெளியானது. தேர்வு முடிவுகள் வெளியானதும் ஒரே மையத்தில் தேர்வெழுதிய 6 பேர் உள்பட 67 தேர்வர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றது, 1,500-க்கும் அதிகமான தேர்வர்களுக்கு கூடுதல் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது என பல்வேறு சர்ச்சைகள் எழும்பின.
இந்த நிலையில் நீட் தேர்வில் 1,500-க்கும் அதிகமானோருக்கு கூடுதல் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதற்கு எதிராக 20,000 மாணவர்களிடம் கையொப்பம் பெற்று 'பிசிக்ஸ் வாலா' என்ற பிரபல கல்வி தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் அலக் பாண்டே சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், "நீட் தேர்வெழுதியவர்களில் 1,500-க்கும் அதிகமான தேர்வர்களுக்கு, தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தன்னிச்சையாக 70 முதல் 80 மதிப்பெண்கள் வரை கருணை மதிப்பெண் என்ற பெயரில் கூடுதல் மதிப்பெண் வழங்கியுள்ளது. இந்த விவகாரத்தைத் தெளிவுபடுத்தும் வரை, இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. மேலும் இந்த மனுவுடன் அப்துல்லா முகமது ஃபைஸ் மற்றும் ஜரிபிதி கார்த்திக் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரணைக்கு பட்டியலிட்டுள்ளது.
முன்னதாக, நீட் தேர்வு குளறுபடியை சுட்டிக்காட்டியும், மறுதேர்வு நடத்த வலியுறுத்தியும் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை செவ்வாய்க்கிழமை பரிசீலித்த நீதிபதிகள் அமர்வு, 'நீட் தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டு, அந்த மனுக்கள் தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு, தேசிய தேர்வு முகமை மற்றும் பீகார் மாநில அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் அந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கெனவே நிலுவையில் உள்ள நீட் தேர்வுக்கு எதிரான மனுக்களுடன் விசாரணைக்கு இணைத்து உத்தரவிட்டனர். அதன்படி, அந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் வருகிற ஜூலை 8-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.