தேசிய தேர்வு முகமை தலைவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..? காங்கிரஸ் கேள்வி
|நீட் முறைகேடு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை தலைவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி இருக்கிறது.
புதுடெல்லி,
நீட் தேர்வு முறைகேடு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் தொடர்பாக சர்ச்சைகள் தீவிரமடைந்து வரும் நிலையில் தேசிய தேர்வு முகமை இயக்குனர் சுபோத் குமார் சமீபத்தில் நீக்கப்பட்டார். ஆனால் தேசிய தேர்வு முகமை தலைவர் பி.கே.ஜோஷி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி இருக்கிறது. அவர் முக்கிய கல்வி நிறுவனங்களில் துணைவேந்தர் மற்றும் இயக்குனர் நியமனம் தொடர்பாக பேட்டி கொடுத்து வருவதாக குற்றம் சாட்டி இருக்கிறது.
இது குறித்து கட்சியின் மூத்த தலைவர் பவன் கெரா தனது எக்ஸ் தளத்தில், 'தேர்வு முறைகேடுகள் தொடர்பாக தேசிய தேர்வு முகமை மீது அனைவரின் பார்வையும் இருந்தாலும், அதன் தலைவர் பி.கே.ஜோஷி மீது நடவடிக்கை எடுக்காதது மட்டுமின்றி, அவர் உயர்கல்வி நிறுவன நிர்வாகி நியமனம் தொடர்பாக பேட்டி கொடுத்துக்கொண்டு இருக்கிறார்' என குறிப்பிட்டு உள்ளார்.
வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் தொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, இதுபோன்ற அதிகாரிகள் நியமனத்தில் இவரை பங்கேற்க செய்யலாமா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.