நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்; 13 பேருக்கு எதிராக சி.பி.ஐ.-யின் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல்
|நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் சி.பி.ஐ. முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அதில், குற்றம் சாட்டப்பட்ட 13 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
புதுடெல்லி,
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடந்தது. 23 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுதிய இந்த தேர்வில் முறைகேடு நடந்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது, பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் வினாத்தாள் கசிவு பற்றிய புகார் எழுந்தது. வினாத்தாளை திருடி, அவற்றுக்கு மருத்துவ மாணவர்கள் மூலம் விடை எழுத வைத்து, நீட் தேர்வர்களுக்கு விற்று பணம் சம்பாதித்ததாக தெரிய வந்தது.
இந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. இதுவரை 6 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இதுவரை 33 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. பீகாரில் போலீஸ் கைது செய்த 15 பேர் உள்பட பள்ளி அதிகாரிகள் மற்றும் மருத்துவ மாணவர்கள் என 36 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் சி.பி.ஐ. முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அதில், குற்றம் சாட்டப்பட்ட 13 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இவர்கள் அனைவரும் வினாத்தாள் கசிவு மற்றும் பிற முறைகேடுகளுடன் தொடர்புடையவர்களாக உள்ளனர் என அதில் பட்டியலிடப்பட்டு உள்ளது.
இதில், குற்றச்சதி, திருட்டு, மோசடி, சான்றுகளை அழிப்பது உள்ளிட்ட பிரிவுகளில் பாட்னா சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.