நீட் தேர்வு முறைகேடு: சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்
|நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி,
நீட் தேர்வு முடிவுகள் கடந்த 4-ந்தேதி வெளியான நிலையில், நீட் தேர்விற்கான மதிப்பெண் வழங்கும் முறையில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
"வினாத்தாள் கசிவு, மோசடி மற்றும் ஊழல் ஆகியவை நீட் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ளன. இதற்கு மோடி அரசுதான் நேரடிப் பொறுப்பு. இது போன்ற முறைகேடுகளும், வினாத்தாள் கசியும் சம்பவங்களும் போட்டித் தேர்வில் கலந்து கொள்பவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதைப் போன்றதாகும்.
நாட்டின் இளைஞர்களை பா.ஜ.க. வஞ்சித்துள்ளது. நீட் மற்றும் பிற தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற நமது திறமையான மாணவர்களுக்கு நீதி கிடைக்க, சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் முறைகேடுகள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.