நீட் தேர்வு: மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய விவகாரம் - மேலும் 2 பேர் கைது
|நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும், 3,500 மையங்களில் நடைபெற்றது.
புதுடெல்லி,
மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும், 3,500 மையங்களில் நடைபெற்றது. நாடு முழுதும், 10.64 லட்சம் மாணவியர் உட்பட 18.72 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. இதில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தேர்வை எழுதினர்.
இந்நிலையில் கேரள மாநிலம் கொல்லத்தில் நீட் தேர்வு நடைபெற்ற கல்லூரி ஒன்றில், தேர்வில் கலந்து கொண்ட மாணவிகளின் உள்ளாடைகளை களையச் செய்து, பிறகு தேர்வு எழுத அனுமதித்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக கொல்லம் சூரநாட்டைச் சேர்ந்த மாணவி ஒருவர் அளித்துள்ள புகாரில், "தேர்வுக்கு சென்ற என்னை அங்கிருந்தவர்கள் உள்ளாடை மற்றும் மேலாடையை கழற்ற கூறி சோதனை செய்தனர்.
என்னை போல பல மாணவிகளின் உள்ளாடைகளையும் கழற்றி சோதனை செய்தனர். கழற்றப்பட்ட உள்ளாடைகளை அங்குள்ள ஒரு அறையில் வைத்திருந்தனர். இது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி விட்டது" என கூறியிருந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது சம்பவம் தொடர்பாக 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள கல்வித்துறை மந்திரி பிந்து, மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உண்மை கண்டறியும் குழுவை மத்திய கல்வித்துறை அமைத்துள்ளது. தேசிய தேர்வு முகமை உயர் அதிகாரிகள் கொண்ட இந்த குழுவினர், கொல்லம் சென்று இது தொடர்பாக விசாரணை நடத்த உள்ளனர்.
இந்தநிலையில், கொல்லத்தில் நீட் தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்வு பார்வையாளர் டாக்டர் ஷம்நாத் மற்றும் மைய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரிஜி குரியன் ஐசக் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.