கோடா நகரில் மீண்டும் சம்பவம்: நீட் பயிற்சி மாணவி தூக்கு போட்டு தற்கொலை
|கோடா நகரில் நீட் பயிற்சி மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோடா,
பயிற்சி மையங்களின் நகரமாக விளங்கும் ராஜஸ்தானின் கோடா நகரில், லட்சக்கணக்கான மாணவர்கள் முகாமிட்டு படித்து வருகிறார்கள். அவர்களில் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டில் 15 மாணவர்கள் கோடா நகரில் தற்கொலை செய்துள்ளதாக தகவல் வெளியானது.
சமீபத்தில் சில மாணவர்கள், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்துள்ளார். அவர் பீகாரை சேர்ந்தவர். கோடா நகரில் தங்கி, நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த அவரது பெயர் ஷெம்புல் பர்வின் (வயது 18) என்று தெரியவந்துள்ளது.
நேற்று அவர் தான் தங்கி படித்த விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். தேர்வில் குறைந்த மதிப்பெண்களே பெற முடிவதாக பெற்றோரிடம் புலம்பி உள்ளார். மேலும் விடுதி உணவு பிடிக்கவில்லையென்று கூறியதால், பெற்றோர் கடந்த சில நாட்களாக கோடாவுக்கு வந்து தங்கி மகளுக்கு வேறு விடுதியை தேடி வந்தநிலையில் அவர் இறந்துள்ளார்.
இந்த ஆண்டில் நிகழ்ந்த 5-வது மாணவர் தற்கொலை இதுவாகும்.