< Back
தேசிய செய்திகள்
நெக்லஸ், ஏ.சி. ஆசையில் ரூ.1.5 லட்சம் இழந்த மனைவி; ஆத்திரத்தில் முத்தலாக் கொடுத்த கணவர்
தேசிய செய்திகள்

நெக்லஸ், ஏ.சி. ஆசையில் ரூ.1.5 லட்சம் இழந்த மனைவி; ஆத்திரத்தில் முத்தலாக் கொடுத்த கணவர்

தினத்தந்தி
|
9 April 2023 10:47 AM IST

நெக்லஸ், ஏ.சி. கிடைக்கும் என்ற ஆசையில் இணையதள மோசடியில் ரூ.1.5 லட்சம் இழந்த மனைவிக்கு ஆத்திரத்தில் கணவர் முத்தலாக் கொடுத்து உள்ளார்.

கேந்திரபாரா,

ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் பாட்னா கிராமத்தில் வசித்து வருபவர் ஷேக் ரசீத். இவரது மனைவி ஜம்ரூன் பீவி. குஜராத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் ரசீத் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில், ரசீத்தின் மனைவி பீவியை, ரவி சர்மா என்பவர் பேஸ்புக்கில் நட்பாக்கி கொண்டார். பீவியை சகோதரி என அழைத்த ரவி, உங்களுக்கு ரூ.25 லட்சம் பணம் தருவேன் என உறுதி அளித்து உள்ளார். இதனை அவரும் நம்பி உள்ளார்.

அதுதவிர, நெக்லஸ், பிரிட்ஜ், ஐபோன், ஏ.சி. உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை பரிசாக கூரியர் வழியே உங்களுக்கு அனுப்பி வைப்பேன் என்றும் ஆசை காட்டியுள்ளார்.

அதன்பின், கூரியர் செலவு தொகையாக ரூ.1.5 லட்சம் மட்டும் பணம் அனுப்பும்படி ரவி கூறியுள்ளார். மோசடி பேர்வழி என அறியாமல் தனது வங்கி கணக்கில் இருந்து அந்த நபருக்கு, பீவி பணம் அனுப்பி இருக்கிறார்.

அதன்பின்னரே மோசம் போன விவரம் பற்றி அறிந்து பீவி வருந்தி உள்ளார். மோசடி நபர் பற்றி சதார் காவல் நிலையத்தில் ஜம்ரூன் பீவி புகார் அளித்து உள்ளார்.

இதனை அறிந்த பீவியின் கணவர் ரசீத் ஆத்திரம் அடைந்து உள்ளார். இணையதள மோசடியில் சிக்கி இவ்வளவு பெரிய தொகையை இழந்து விட்டார் என தெரிய வந்ததும், தொலைபேசி வழியே மனைவியை அழைத்து உள்ளார். அவருக்கு, ஆத்திரத்தில் முத்தலாக் கொடுத்து விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜம்ரூன் பீவி, போலீசில் ரசீத்துக்கு எதிராக புகார் ஒன்றை அளித்து உள்ளார். கணவரின் செயலால் அதிர்ச்சி அடைந்தபின், தொடர்ந்து அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. அதனாலேயே வேறு வழியின்றி போலீசில் புகார் அளித்தேன் என பீவி கூறியுள்ளார்.

முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 2019-ன்படி முத்தலாக் சட்ட விரோதம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. குற்ற செயலாக அறிவிக்கப்பட்ட, இதில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

மேலும் செய்திகள்