< Back
தேசிய செய்திகள்
தீப்பெட்டி தொழிலை காப்பாற்ற உரிய நடவடிக்கை - நிர்மலா சீதாராமன் உறுதி
தேசிய செய்திகள்

தீப்பெட்டி தொழிலை காப்பாற்ற உரிய நடவடிக்கை - நிர்மலா சீதாராமன் உறுதி

தினத்தந்தி
|
16 Nov 2022 5:57 AM IST

தீப்பெட்டி தொழிலை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தேசிய சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் சார்பில் டெல்லியில் நேற்று நடந்த மாநாட்டில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

தென் மாவட்ட மக்கள் படும் கஷ்டங்களை நான் அறிவேன். வறண்டு கிடக்கும் அந்த மண்ணில் 150 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோல சிறுதொழிலை முன்னோர்கள் தொடங்கினார்கள். தம்மோடு தொழில் வாய்ப்புகள் முடிந்துவிடாமல் எதிர்கால தலைமுறைகளும் பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் கொல்கத்தா சென்று தீப்பெட்டி தொழில் பயிற்சி பெற்று அதை நடத்தி இருக்கிறார்கள்.

அதன் விளைவாகவே இன்று நமது மண்ணில் பல தொழில்கள் வளர்ச்சி அடைந்துள்ளன. தற்போது பசுமை பட்டாசுகள் தயாரிக்கவேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆராய்ச்சி, மூலதனம், அதையெல்லாம் செய்யக்கூடிய சக்தி நம்மிடம் இருக்கிறதா என்பதை பார்க்கவேண்டும். எல்லோரும் சேர்ந்து முயற்சி எடுத்தால்தான் அதில் தீர்வு காண முடியும்.

தீப்பெட்டி தொழிலை பொறுத்தவரை முன்பு உலக அளவில் முன்னணி நாடாக இருந்த சுவீடன் இன்று 15 சதவீதமே ஏற்றுமதி செய்கிறது. ஆனால் உலகில் தீப்பெட்டி ஏற்றுமதியில் 30 சதவீதம் சிவகாசியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுவது பெருமைக்குரிய விஷயம். தீப்பெட்டி தொழிலில் சிகரெட் லைட்டர் மூலம் இடையூறு இருப்பது பற்றி வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயலுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்க முயற்சிகளை எடுக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்