இமாசலபிரதேச மாநிலத்தில் புதிய எம்.எல்.ஏ.க்களில் 93 சதவீதத்தினர் கோடீசுவரர்கள்
|இமாசலபிரதேச மாநிலத்தில் புதிய எம்.எல்.ஏ.க்களில் 93 சதவீதத்தினர் கோடீசுவரர்கள் ஆவார்கள். 41 சதவீதத்தினர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது.
இமாசலில் காங்கிரஸ் ஆட்சி
68 இடங்களைக் கொண்டுள்ள இமாசலபிரதேச மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் 40 இடங்களில் அமோக வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் பற்றிய சுவாரசிய தகவல்களை இமாசலபிரதேச தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ளது.
63 கோடீசுவர எம்.எல்.ஏ.க்கள்
இது பற்றிய ஒரு அலசல் வருமாறு:-
* 68 புதிய எம்.எல்.ஏ.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.13 கோடியே 26 லட்சம் ஆகும். 2017 தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.8 கோடியே 88 லட்சம் ஆகும்.
* புதிய எம்.எல்.ஏ.க்களில் 63 பேர் (93 சதவீதம்) கோடீசுவரர்கள் ஆவார்கள்.
* 2017 தேர்தலில் 52 கோடீசுவரர்கள் எம்.எல்.ஏ.க்களாக தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இந்த முறை அதையும் தாண்டி 63 கோடீசுவரர்கள் எம்.எல்.ஏ.க்களாக தேர்வாகி உள்ளனர்.
38 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்
* காங்கிரஸ் கட்சியின் 40 எம்.எல்.ஏ.க்களில் 38 பேர் கோடீசுவரர்கள். பா.ஜ.க.வின். 25 எம்.எல்.ஏ.க்களில் 22 பேர் கோடீசுவரர்கள். 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் கோடீசுவரர்கள்தான்.
* காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.14.25 கோடி. பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.12.42 கோடி. சுயேச்சைகளின் சராசரி சொத்து மதிப்பு 7.09 கோடி
முதல் இடம் பிடிக்கும் கோடீசுவர எம்.எல்.ஏ.
* இமாசலபிரதேச எம்.எல்.ஏ.க்களில் கோடீசுவரர்களில் முதல் 3 இடங்களைப் பெற்றிருப்பவர்கள்கள் பால்பீர் சிங் வர்மா (பா.ஜ.க.). இவரது சொத்து மதிப்பு ரூ.128 கோடி. இரண்டாம் இடத்தில் இருப்பவர், முன்னாள் முதல்-மந்திரி வீரபத்ர சிங்கின் மகன் விக்ரமாதித்யா சிங் (காங்கிரஸ்). இவரது சொத்து மதிப்பு ரூ.101 கோடி. மூன்றாம் இடத்தில் இருப்பவர் ஆர்.எஸ்.பாலி (காங்கிரஸ்). இவரது சொத்து மதிப்பு ரூ.92 கோடி.
* இமாசலபிரதேச புதிய எம்.எல்.ஏ.க்களில் மிகக்குறைந்த சொத்து மதிப்பை பெற்றிருப்பவர், லோகிந்தர் குமார் (பா.ஜ.க.). இவரது சொத்து மதிப்பு ரூ.29 லட்சம் மட்டும்.
* புதிய எம்.எல்.ஏ.க்களில் 16 பேர் ரூ.1 கோடிக்கு மேல் கடன் வைத்திருக்கிறார்கள்.
ஒரே ஒரு பெண் எம்.எல்.ஏ.
* அதிக வருமானம் கொண்ட புதிய எம்.எல்.ஏ. ஆர்.எஸ்.பாலி (காங்கிரஸ்). இவரது வருமானம் ரூ.2 கோடிக்கு மேல் ஆகும்.
*புதிய எம்.எல்.ஏ.க்களில் 29 பேர் 25-50 வயதினர். 38 பேர் 51-80 வயதினர். ஒரே ஒரு எம்.எல்.ஏ. 82 வயதானவர்.
* இந்த மாநில சட்டசபையை ஒரே ஒரு பெண் எம்.எல்.ஏ. அலங்கரிக்கப்போகிறார். அவர் பா.ஜ.க.வின் ரீனா காஷ்யப் ஆவார். கடந்த முறை 4 பெண் எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர்.
* 28 புதிய எம்.எல்.ஏ.க்கள் (41 சதவீதம்) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
இந்த தகவல்கள் வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளர்கள் தாக்கல் செய்த 'அபிடவிட்' அடிப்படையிலானது.