நஞ்சன்கூடு அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்; 2 பேர் சாவு
|நஞ்சன்கூடு அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதலில் 2 பேர் இறந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
மைசூரு-
நஞ்சன்கூடு அருகே மோட்டார் சைக்கிள்- லாரி ேமாதலில் 2 பேர் இறந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
வேலைக்கு செல்வது வழக்கம்
மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா கடலே கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 50). மகேஷ் (33). இவர்கள் 2 பேரும் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். அவர்கள் 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வேலைக்கு வருவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பணி முடிந்து காலை வீட்டிற்கு வந்தனர். பின்னர் நஞ்சன்கூடு டவுனுக்கு சிவராஜ், மகேஷ் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிள் நஞ்சன்கூடு- குண்டலுபேட்டை தேசிய நெடுஞ்சாலை கலலே கேட் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீதும், பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீதும் மோதியது. இதில், சிவராஜ், மகேஷ், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மகாதேவ் அவரது தாய் சிக்கதேவம்மா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
2 பேர் சாவு
அவர்கள் 4 பேரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு நஞ்சன்கூடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சிவராஜ், மகேஷ் ஆகிய 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மகாதேவ், சிக்கதேவம்மா ஆகிய 2 பேர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்த நஞ்சன்கூடு புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நஞ்சன்கூடு புறநகர் போலீசார் லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.