< Back
தேசிய செய்திகள்
மூடிகெரே அருகே காபி தோட்டத்தில் சுற்றித்திரிந்த குட்டி யானை மீட்பு
தேசிய செய்திகள்

மூடிகெரே அருகே காபி தோட்டத்தில் சுற்றித்திரிந்த குட்டி யானை மீட்பு

தினத்தந்தி
|
31 July 2023 6:45 PM GMT

மூடிகெரேயில் தாயை பிரிந்து காபி தோட்டத்தில் சுற்றித்திரிந்த குட்டி யானையை மீட்ட வனத்துறையினர், அதனை தாய் யானையுடன் சேர்க்க தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்.

சிக்கமகளூரு-

மூடிகெரேயில் தாயை பிரிந்து காபி தோட்டத்தில் சுற்றித்திரிந்த குட்டி யானையை மீட்ட வனத்துறையினர், அதனை தாய் யானையுடன் சேர்க்க தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்.

காபி தோட்டம்

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா பிக்னஹள்ளி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் வனப்பகுதியையொட்டி உள்ள தனக்கு சொந்தமான காபி தோட்டத்துக்கு சென்றார். அப்போது காபி தோட்டத்தில் குட்டி யானை ஒன்று சுற்றித்திரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், காட்டு யானை கூட்டம் அங்கு இருக்கலாம் என சந்தேகம் அடைந்தார்.

இதுபற்றி ரமேஷ், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பரிதவிக்கும் குட்டி யானை

அப்போது அந்தப்பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. மேலும் அந்த குட்டி யானை, தாய் யானையை பிரிந்து அந்தப்பகுதியில் சுற்றித்திரிந்தது தெரியவந்தது. மேலும் தாய் யானையை பிரிந்த அந்த குட்டி யானை பரிதவித்து கொண்டிருந்தது. தொடர்ந்து பிளிறியபடியே இருந்தது. அங்கும் இங்கும் ஓடி கொண்டே இருந்தது. இதையடுத்து அந்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர்.

அந்த குட்டி யானை எங்கிருந்து வந்தது, அதன் தாய் யானை எங்கே என்று வனத்துறையினருக்கு தெரிய வில்லை. இந்த நிலையில் மூடிகெரே எல்லையில் உள்ள ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகாவில் நேற்று முன்தினம் 20 காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. அதனை வனத்துறையினர் விரட்டியபோது, அந்த கூட்டத்தில் இருந்து தாயை பிரிந்து குட்டி யானை மூடிகெரே வனப்பகுதிக்குள் தனியாக வந்தது ெதரியவந்தது.

தாயுடன் சேர்க்க முயற்சி

தாயை பிரிந்து பரிதவித்து வரும் குட்டி யானையை அதன் தாய் யானையிடம் சேர்க்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குட்டி யானையை சக்லேஷ்புரா வனப்பகுதிக்கு அழைத்து சென்று தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

முன்னதாக குட்டி யானையை காண சுற்றுவட்டார கிராம மக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் யானையை பார்த்து ரசித்தனர்.

மேலும் செய்திகள்