மூடிகெரே அருகே அரசு பஸ்-கார் மோதல்; தாய்-மகன் பலி
|மூடிகெரே அருகே அரசு பஸ்-கார் மோதிய விபத்தில் தாயும், மகனும் உயிரிழந்தனர்.
சிக்கமகளூரு-
மூடிகெரே அருகே அரசு பஸ்-கார் மோதிய விபத்தில் தாயும், மகனும் உயிரிழந்தனர்.
சாமி தரிசனம்
பெங்களூரு கோனனகுண்டே பகுதியை சோ்ந்தவர் சிவயோகய்யா (வயது 49). இவரது மனைவி பூஜா (40). இந்த தம்பதிக்கு ராஜசேகர் (18) என்ற மகன் இருந்தார். இந்தநிலையில் 3 பேரும் காரில் தட்சிண கன்னடா மாவட்டம் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலுக்கு சென்றனர்.
பின்னர் அவர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு பெங்களூருவுக்கு சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே வழியாக வந்தனர். காரை ராஜசேகர் ஓட்டினார். அப்போது ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புராவில் இருந்து மூடிகெரே நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.
பஸ்-கார் மோதல்
முத்ரமணே கிராமம் அருகே வந்த அரசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து, ராஜசேகர் ஓட்டி வந்த கார் மீது மோதியது. இதில் அரசு பஸ்சின் கண்ணாடி உடைந்து சிதறியது. மேலும் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
இதில் காரை ஓட்டி வந்த ராஜசேகர், முன் சீட்டில் அமர்ந்திருந்த பூஜா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சிவயோகய்யா பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மூடிகெரே அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
வழக்குப்பதிவு
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மூடிகெரே போலீசார் ராஜசேகர், பூஜா ஆகியோரின் உடல்களை மீட்டு மூடிகெரே அரசு ஆஸ்பத்தரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக மூடிகெரெ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.