மங்களூரு அருகே தொழிலதிபரை தாக்கி ரூ.1¾ லட்சம் பணம் பறிப்பு
|மங்களூரு அருகே தொழிலதிபரை தாக்கி ரூ.1¾ லட்சம் பணம் பறித்து: சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் பகுதியை சோ்ந்தவர் முகமது. தொழிலதிபர். இவர் தனது காரில் சொந்த வேலை காரணமாக கத்ரி பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காரை 3 பேர் வழிமறித்தனர்.
அவர்கள் திடீரென தொழில் அதிபரை தாக்கினர். பின்னர் அவர்கள் காரில் இருந்த ரூ.1.75 லட்சம் ரொக்கத்தை பறித்து கொண்டு தப்பி சென்றனர். மேலும் 3 பேரும் முகமதுவிடம் இதைப்பற்றி வெளியே சொல்ல கூடாது என மிரட்டலும் விடுத்தனர்.
இதுகுறித்து முகமது உருவா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பியோடிய மர்மநபர்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள். கடந்த சில நாட்களாக கத்ரி பகுதியில் வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இதனை தடுக்க போலீசார் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.