மங்களூரு அருகே பீரோவில் இருந்த ரூ.4¼ லட்சம் நகைகள் திருட்டு
|மங்களூரு அருகே வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் பீரோவில் இருந்த ரூ.4¼ லட்சம் நகைகள் திருடிவிட்டு சென்றனர்.
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை அடுத்த கத்ரி பகுதியை சேர்ந்தவர் முகமது இலியாஸ். இவரது மனைவி ரோனிஷா. கடந்த ஜூலை மாதம் இவரது வீட்டில் இருந்த தங்கநகைகள் திருடுபோனதாக கூறப்படுகிறது. இதை அறிந்த ரோனிஷா நேற்று முன்தினம் கத்ரி போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். அந்த புகாரில், எனக்கும் எனது கணவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நான் எனது கணவரிடம் இருந்து பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றுவிட்டேன்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் கணவர் வீட்டிற்கு வந்தேன். அப்போது அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த எனது 75 கிராம் தங்க நகைகள் மாயமாகியிருந்தது. அந்த நகைகளின் மொத்த மதிப்பு ரூ.4.12 லட்சம் ஆகும். இதுகுறித்து எனது கணவரிடம் கேட்டேன். அதற்கு அவர் எந்த பதிலும் கூறவில்லை. எனவே எனது கணவர்தான் அந்த நகைகளை திருடி விற்பனை செய்திருக்க கூடும்.
எனவே கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக ரோனிஷாவின் கணவர் முகமது இலியாசிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.