மங்களூரு அருகே ஆட்டோ டிரைவரை தாக்கிய 3 பேர் கைது
|மங்களூரு அருகே ஆட்டோ டிரைவரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை அடுத்த பெல்தங்கடி தாலுகா உஜிரியில் உள்ள தனியார் கல்லூரியில் பெங்களூருவை சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்த மாணவி பெங்களூரு செல்வதற்காக தர்மஸ்தலா பஸ் நிலையத்திற்கு ஆட்டோவில் வந்தார். உஜிரியை சேர்ந்த ஆஷிக் என்பவரின் ஆட்டோவில் வந்தார்.
ஆட்டோ டிரைவர் ஆஷிக் மாணவியை பஸ்நிலையத்தில் இறக்கிவிட்டு ெசன்றார். அப்போது தர்மஸ்தலா பஸ் நிலையம் அருகே நின்ற 3 பேர் ஆட்டோவை வழிமறித்தனர். மேலும் அவர்கள் ஆஷிக்கிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அந்த கும்பல் ஆஷிக்கை தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டது. இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த ஆஷிக் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து ஆஷிக் கொடுத்த புகாரின் பேரில் உஜிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய 3 பேரையும் தேடி வந்தனர். இந்தநிலையில் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் தர்மஸ்தலாவை சேர்ந்த அவினாஷ் (வயது 26), நந்தீப் (20), உப்பினங்கடியை சேர்ந்த அக்ஷத் (22) என்பது தெரியவந்தது. கைதான 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.