மங்களூரு அருகே குட்டையில் மூழ்கி வாலிபர்கள் 2 பேர் பலி
|மங்களூரு அருகே குட்டையில் மூழ்கி வாலிபர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மங்களூரு-
மங்களூரு அருகே குட்டையில் மூழ்கி வாலிபர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
தனியார் நிறுவன ஊழியர்கள்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உள்ள அல்பே பகுதியை சேர்ந்தவர் விக்ஷித் (வயது28). இவரது நண்பர் வருண் (26). இவர்கள் 2 பேரும் மங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இந்தநிலையில், விக்ஷித் மற்றும் வருண் வாரவிடுமுறையில் சுற்றுலா செல்வது வழக்கம். அதன்படி விடுமுறை நாட்களில் அவர்கள் 2 பேரும் சுற்றுலா சென்று வந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தட்சிண கன்னடா மாவட்டத்தில் கனமழை பெய்து வந்தது. இதனால் மாவட்டம் முழுவதும் மழை பாதிப்புகள் அதிகம் ஏற்பட்டன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது. இந்தநிலையில், விடுமுறைநாளான நேற்றுமுன்தினம் வருண், விக்ஷித் ஆகியோர் நண்பர்களுடன் அல்பே பகுதியில் உள்ள குட்டையில் குளிப்பதற்காக சென்றனர்.
அப்போது அவர்கள் குட்டையில் இறங்கி குளித்து கொண்டு இருந்தனர். இதில் விக்ஷித் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்து கொண்டு இருந்தார். அவரை காப்பாற்ற வருண் சென்றார். அவரும் தண்ணீரில் மூழ்கினார்.
பிணமாக மீட்பு
இதுகுறித்து நண்பர்கள் மங்களூரு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு மங்களூரு புறநகர் போலீசாருடன் வந்தனர். அவர்கள் குட்டையில் குதித்்து விக்ஷித், வருண் ஆகிய 2 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் 2 மணி நேரம் போராடி அவர்கள் 2 பேரையும் தீயணைப்பு வீரர்கள் பிணமாக மீட்டனர்.
இதையடுத்து போலீசார் விக்ஷித், வருண் ஆகிய 2 பேர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மங்களூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மங்களூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.